ஆடல் அரங்கத்தில் அழகே உருவான அந்த எழில் மங்கை ஆடிக் கொண்டிருந்தாள். அவளது ஆடலை விஜயநகர சாம்ராஜ்யத்தின் பேரரசராக அண்மையில் முடிசூடிய அச்சுத தேவ மகாராயர் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார். ஆவருடன் அவரது பட்டத்தரசி வரதம்பிகாவும் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள். அச்சுத தேவராயர் புகழ் பெற்ற கிருஷ்ணதேவராயரின் தம்பி. கிருஷ்ண தேவராயர் இறந்த பின்னர் சுமார் நான்கு மாதங்களுக்கு முந்னர் தான் விஜயநகரப் பேரரசராக முடி சூட்டிக் கொண்டார். அந்த பட்டாபிஷேக விழாவின் போது தான் அந்தப் பெண்ணின் ஆடலை முதன் முதலில் அவர் பார்த்தார். அதிலிருந்து அவளது ஆடலைக் காண வேண்டும் என்னும் ஆசை அவருக்கு மிக அதிகமாக இருந்தது. அதன் பயன்தான் விஜயநகரத்தில் நாட்டிய மண்டபத்தில் அப்பெண் ஆடிக் கொண்டிருக்கிறாள்.
அவள் சோழ நாட்டிலிருந்து வந்த ஆடல் மகளிர் வழி வந்தவள். திருப்பதிக் கோயிலில் ஆடல் பணி புரிந்தவள். அதனால் அவளுக்கு திருமலை மாணிக்கம் என்பது பெயர். 18லிருந்து 20 வயதுக்குள் தான் இருக்கும். அவளது ஆடல்கலையும், அழகும், புத்தி கூர்மையும் அரசரைப் பெரிதும் கவர்ந்திருந்தன. அவள் ஆடும் போது அவளுடன் ஓரிரு நடனங்களில் அவளது தங்கையும் சேர்ந்து ஆடினாள். அவள் சிறியவள். அக்காளைப் போலவே தங்கையும் எழில் மிகுந்தவள் தான்.
இவர்களது ஆடலை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த அரசர் திடீரென ஒரு முடிவுக்கு வந்தவர் போல் தலையை அசைத்தார். அப்பொழுது ஒரு தூதுவன் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலிருந்து வந்த இரண்டு பட்டர்களை அழைத்து வந்து அரசர் முன் நிறுத்தினான். அவர்கள் அருளாளப் பெருமானின் பிரசாதத்தை மந்திரம் சொல்லி அரசனுக்கு கொடுத்தனர். அரசரும் அதை எழுந்து வாங்கி தலை மீது வைத்துக் கொள்வது தெரிந்தது. இதைச் சற்று தொலைவில் இருந்து ஒரு இளைஞன் 18 வயது இருக்கும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தான். அரசர் அவர்களிடம் கோயிலைப் பற்றி ஏதோ கேட்பதும், அவர்கள் பதில் கூறுவதும் தெரிந்தது. இதுவரை மகிழ்ச்சியிலிருந்த அரசரின் முகம் சற்றென்று மாறியது. கண்கள் சிவந்தன. தன் அருகிலிருந்த பிரதானி ஒருவரை அழைத்து ஒரு செய்தியைக் கூறி அந்த பட்டர்களுடன் செல்லக் கூறினார். வந்தவர்கள் பிரதானியுடன் திரும்பினர். அன்று ஆடல் பாதியிலேயே நின்றுவிட்டது.
அவையில் நின்று கொண்டிருந்த இளைஞன் மறுநாள் அரசரது மலர்வனத்தில் மலர் செடியின் பின்புறத்தே ஒளிந்து நின்று கொண்டிருந்தான். அவன் யார் வரவையோ எதிர்பார்ப்பது போல பார்த்துக் கொண்டிருந்தான். தன்னை யாராவது பார்த்து விட போகிறார்களே என்று எண்ணுவது தெரிந்தது. சிறிது நேரத்தில் அந்த ஆடல் மகள் திருமலை மாணிக்கத்தின் தங்கை அங்கு இங்கும் அங்கும் பார்த்துக் கொண்டே வந்தாள். சட்டென்று தாவி அவளைப் பிடித்து தன்னருகே இழுத்துக் கொண்டான். அம்மலர்ச் செடிக்கு பின்புறத்தில் யாரும் காணாதவாறு இருவரும் ஒருவரையொருவர் அணைத்தவாறு அமர்ந்தனர். அவளை அம்பாள் என்று அவன் அழைத்தான். மூர்த்திமாம்பாள் என்பது அவள் இயற்பெயர். ஏதாவது சொல்லேன் என்றான் இளைஞன். அவள் ஏதும் சொல்லவில்லை. அவன் முகத்தைப் பார்த்து புன்னகை பூத்தாள். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மிகவும் நேசித்தார்கள் என்பது தெரிந்தது. சரக்கென்று சத்தம் கேட்கவே அவர்கள் அணைப்பு நெகிழ்ந்தது. இருவரும் சிறிது நேரத்தில் பிரிந்து சென்று விட்டனர். அவர்களது பேச்சிலிருந்து இருவரும் அடிக்கடி இவ்வாறு சந்தித்து பேசுவது வழக்கம் என்று நன்கு தெரிந்தது.
மறுநாள் அரசர் அவைக்குள் முக மலர்ச்சியுடன் நுழைந்து கொண்டிருந்தார். அவரோடு மற்ற பிராதனிகளும் தளவாய்களும் வீரர்களும் வந்து கொண்டிருந்தனர். அவர்களுடன் அந்த இளைஞனும் வந்து கொண்டிருந்தான். அரசன் அரியணையில் அமர்ந்ததும் மற்றவர்கள் தங்கள் அரியணையில் அமர்ந்தனர். அரசர் திருமலை மாணிக்கத்தின் ஆடலும் அழகும் என்னை மிகவும் கவர்ந்துவிட்டன. அது மட்டுமல்ல அவள் சிறந்த கவிதை இயற்றும் வல்லமை பெற்றவள் கூட.
வரதாம்பிகா பரிணயம் என்ற நாட்டிய நாடகம் இயற்றி வருகிறாள். அக்கவிதை நயமும் என்னை மிகவும் மகிழச்சிக் கடலில் ஆழ்த்துகிறது என்றார். அந்த அவையில் இருந்த திருமலை மாணிக்கத்துக்கு உள்ளம் புல்லரித்தது. எழுந்து நின்று அரசரை வணங்கினாள். அரசர் அரியணையிலிருந்து எழுந்து அவளிடம் வந்தார். அவளுக்குச் சிறந்த பரிசு கிடைக்கப் போகிறது என்று எல்லோரும் மகிழ்ந்தனர். அரசர் கழுத்திலிருக்கும் முத்தாரம் இனி அவளுடையது தான் என்று எண்ணினர். அரசர் மற்றவரகள் எதிர்பாராத ஒரு செயலைச் செய்தார். அவளது கரத்தை கைப்பற்றினார். திருமலை மாணிக்கத்தை என் தேவியாக மணந்து கொள்ளப் போகிறேன் என்று கூறினார். ஆடல் மகளை அரசியாகக் கொள்வதா? அரசே! என்றனர் மற்றவர்கள். அரசர் சிரித்துக் கொண்டே அவர்களைப் பார்த்தார். ஆடும் பெண் தானே? போகியாக அவளைக் கொள்ளலாமே என்று தானே நினைக்கிறீர்கள் இல்லை. அவள் தேவியாகவே தகுதி வாய்ந்தவள். திருமண ஏற்பாடுகள் நடக்கட்டும் என்று கூறிவிட்டார்.
அப்பொழுது அவர் கண்ணில் அந்த இளைஞன் பட்டான். என்ன சின்ன செவ்வப்ப இன்றிலிருந்து உன்னை என் அடப்பக்காரனாக நியமிக்கிறேன் என்று கூறினார். அரசரோடு எப்பொழுதும் உடனிருந்து தாம்பூலம் மடித்துக் கொடுக்கும் பணிக்கு அடப்பம் என்று அக்காலத்தில் பெயர்.
செவ்வப்பனின் தந்தை திம்மப்ப நாயக்கருக்கு பெருமை. மகிழ்ச்சி தன் மைந்தனுக்கு பெரிய பதவி கிட்டியுள்ளது என்று பெருமை சிலருக்கு பொறாமை கூட. செவ்வப்பன் அதை ஒரு புறம் மகிழ்வுடனும் மறுபுறம் வருத்தத்துடனும் ஏற்றுக் கொண்டான். காரணம் அரசருடனேயே எப்பொழுதும் இருக்க வேண்டுமாதலால் இனி அம்பாளை தன் விருப்பப்படி சந்திக்க முடியாதோ என்று எண்ணினான்.
அச்சுத தேவராயர் திருமலை மாணிக்கத்தை மணந்து கொண்டார். அவளுக்கு திருமலாம்பாள் என்ற பட்டப் பெயர் கொடுக்கப்பட்டது. ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பார்கள். அந்த பழமொழி திருமலாம்பாள் விஷயத்தில் முற்றிலும் பொய்த்தது. அவளது தாசானு தாசனாக மாறி விட்டார் அச்சுத தேவராயர். அவள் மீது உள்ள ஆசையின் காரணமாக அவளது தங்கை அம்பாள் மீது அரசருக்கு மிகுந்த அன்பு. புதுமாப்பிள்ளைக்கு மைத்துனியிடம் அன்பு அதிகம் இருக்கும் என்பார்கள். அதுபோல பெண்கள் இருவரும் அந்தப்புரம் சேர்ந்ததால் முன்போல் செவ்வப்பனால் அம்பாளைப் பார்க்க முடியவில்லை.
ஒரு நாள் அரசர் அவையில் அரசரின் அருகில் செவ்வப்பன் நின்று கொண்டிருந்தான். அப்பொழுது தூதன் ஒருவன் வந்து செய்திகூறிய போது தான் செவ்வப்பனுக்கு ஆடலரங்கத்தில் அன்று நடந்த நிகழ்ச்சியின் உண்மை விளங்கியது. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் தேவகன்மியாக பூஜிப்பவர் இருந்த தழுவக் குழைந்தான் பட்டர் என்பவரின் மகன் செல்லப்பன் என்பவன். அவன் கிருஷ்ணதேவராயரின் அன்புக்கு பாத்திரமானவன். சிறந்த வீரன். ஆதலின் கிருஷ்ணதேவராயர் பட்டத்துக்கு வந்ததும் தொண்டைமண்டலம், தென்னாற்காடு, வடஆற்காடு, செங்கல்பட்டு, சோழ நாடு, இராமநாதபுரம் ஆகிய சீமைகளுக்கு அவனை பிரதான அரசராகவே நியமித்திருந்தார். அவன் பல போர்களில் வெற்றி வாகைத் பெற்றுத் தந்ததோடும் கூட சீமைகளை மிகவும் திறமையுடன் ஆண்டு வந்தவன். அவனுக்கு வீர நரசிங்கராய நாயக்கர் என்ற பட்டமும் உண்டு.
சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மிகவும் விரிந்த சீமையின் தலைவனாகத் திகழ்ந்தவன் அவன். கிருஷ்ண தேவராயர் இறந்ததும் அச்சுத தேவராயர் தனது பட்டாபிஷேகத்தன்று சில ஊர்களை தானம் அளித்தார். அந்த ஊர்களை காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் கோயிலுக்கும், வரதராஜர் கோயிலுக்கும் சமமாக பிரித்துத்தர செல்லப்பனிடம் ஆணையிட்டார். காஞ்சிபுரம் அப்பொழுது செல்லப்பனின் கீழிருந்தது. ஆனால் செல்லப்பன் அச்சுததேவராயர் கூறியபடி செய்யவில்லை. ஏகாம்பரநாதர் கோயிலுக்கு அதிகம் வழங்கி விட்டான். செல்லப்பன் அரசரின் ஆணையை மீறிய செய்தியைத்தான் காஞ்சிபுரம் பட்டர்கள் அன்று ஆடலரங்கத்தில் கூறினார்கள். இது ஏதோ சிறிய செயலேயானாலும் தனது ஆணையை எதிர்த்து தனியரசாக முயற்சிக்கிறான் என அச்சுதராயர் எண்ணினார். அதனால் அரசர் தொண்டை நாடு சீர்மை ஆகியவற்றின் பிரதானி பதவியிலிருந்து செல்லப்பனை நீக்கி அன்று ஆணையிட்டு அனுப்பினார்.
இன்று வந்த தூதுவன் செல்லப்பன் பரமக்குடி சென்று தும்பிச்சி நாயக்கனை கூட்டுச் சேர்த்து கொண்டு, திருவனந்தபுரம் சேர அரசர் பூதல வீர ஸ்ரீ உதயமார்த்தாணட வர்மரான சிறைவாய் மூத்த திருவடி என்பவருடனும் சேர்ந்து கொண்டு தென்காசி மீது படையெடுத்து அதைக் கைப்பற்றி கொண்டுள்ளான் என்றும், தென்காசி பாண்டியர் துரத்தியடிக்கப் பட்டுள்ளார் என்றும் அரசரிடம் கூறினான். அரசரின் சீற்றம் எல்லை கடந்தது. “நாமே செல்லப்பன் மீது படை நடத்துகிறோம். நமது பிரதானி சாளுக்கராஜூ திருமலை ராயர் நம்முடன் வருவார்” என்று கர்ஜித்தார். அடப்பம் செவ்வப்பனுக்கு தானும் உடன் செல்ல வேண்டும் என்று தெரியும். தன் காதலி அம்பாளை நினைத்தான். அவளை பார்க்க முடியாமலேயே போய்விடுமோ? ஏங்கி என்ன பயன்?
விஜய நகரப் பெரும்படை ஸ்ரீரங்கத்தை வந்தடைந்தது. அன்று அரசருக்கு தாம்பூலம் ஏந்தி சென்ற செவ்வப்பனுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அரசருடன் தேவி திருமலாம்பாளும் உடன் வந்திருந்தாள். அவளுடன் அம்பாளும் வந்திருக்கக் கூடாதா? இங்காவது அவளைச் சந்திக்கலாமே என்று அவனுக்கு எண்ணத் தோன்றியது. அரசர் மாலை கோயிலுக்குச் செல்வார். தனக்கு சிறிது அவகாசம் கிடைக்கும். தனியாகச் சுற்றி சுற்றி வரவேண்டும் என்று எண்ணினான். காவிரிக் கரைக்கு சென்றான். அவன் மனம் மிகவும் சஞ்சலித்துக் கொண்டிருந்தது. அப்பொழுது எதிர்பாராதவாறு அம்பாள் அங்கு வந்தாள். பிரிந்தவர் கூடின் பேசவும் வேண்டுமோ? ஆற்றங்கரையில் மணலில் அருகருகில் இருவரும் அமர்ந்திருந்தனர். என்ன பேசுவதென்றே இருவருக்கும் தெரியவில்லை. சளசள வென்று சிலர் நடந்து செல்லும் ஓசை கேட்டது. சட்டென எழுந்து திரும்பி பார்த்தான் செவ்வப்பன். சற்று தொலைவில் சக்ரவர்த்தி அச்சுத தேவராயர் சிலருடன் பேசிக் கொண்டு செல்வதைப் பார்த்தான். மனம் படபடவென்று அடித்துக் கொண்டது. சக்கரவர்த்தி தேவராயர் எங்கே? அவர் மைத்துனி அம்பாள் எங்கே? தான் எங்கே? அம்பாளிடம் விடை பெற்று திரும்ப எண்ணினான்.
பார்க்காதவர் போல் போய் கொண்டிருந்த அரசர் அவன் முன் நின்று கொண்டிருந்தார். “செவ்வப்பா” அரசரின் குரல் கணீர் என்று ஆனால் கடுமையாகக் கேட்டது. அவர் முகத்தில் சினமா? ஏளனமா? குரோதமா? எது என்று பார்க்கும் தைரியம் அவனுக்கு இல்லை. தனக்கு ஏதோ நடக்கப் போகிறது என்று எண்ணினான். இன்றிலிருந்து உன்னை அடப்பம் பதவியிலிருந்து நீக்கி விட்டேன். நாளை காலை என்னை வந்து பார் என்று கூறிச் சென்றுவிட்டார்.
மருண்ட மான் என அம்பாள் ஓடினாள். தன் அக்காவின் மடியில் முகத்தை புதைத்துக் கொண்டு விக்கி விக்கி அழுதாள். தேவி திருமலாம்பாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. தன்னிடம் உயிரையே வைத்திருக்கும் தங்கைக்கு என்ன நடக்குமோ? நாம் ஆடல் மகளாகவே இருந்திருக்கக் கூடாதா? என்று நினைத்தாள். அன்று இரவு அச்சுத தேவராயருக்கும் திருமலாம்பாளிடம் ஆசை மோகம் எல்லாம் மறைந்திருக்குமோ? அவளிடம் இவ்வளவு நாட்கள் எவ்வளவு அன்பாக இருந்தார்! அன்று அரசரிடம் பேசுவதற்கே திருமலாம்பாளுக்குப் பயமாக இருந்தது.
மறுநாள் காலை செவ்வப்பன் அரசர் முன் நின்றான். பிரதானி சாளுக்கராஜூ திருமலை நின்று கொண்டிருந்தார். அரசர் பிரதானியிடம் கூறினார். நான் ஸ்ரீரங்கத்திலேயே தங்கி விடப்போகிறேன். நீ படையுடன் சென்று தும்பிச்சி நாயக்கனையும் செல்லப்பனையும் வென்று வா. இதோ இந்த செவ்வப்பனும் உன்னுடன் வருவான். இவனை தூசிப் படையின் தலைவனாக முன்னால் அனுப்பு என்றார்.
இருபது ஆண்டுகள் கிருஷ்ண தேவராயனின் தானைத் தலைவனாகத் திகழ்ந்து வெற்றி சூடியவன் செல்லப்பன். அவனுடன் போரிட இந்த இளைஞன் செவ்வப்பன் முன் சென்றால் என்ன ஆகும்? அரசர் ஏன் இவ்வளவு கடுமையாக நடந்து கொள்கிறார்? என மற்றவர்களுக்கு தெரியவில்லை. செவ்வப்பன் மட்டும் அரசர் தன்னை களப்பலியாக்கத் தீர்மானித்துள்ளார் என எண்ணினான். இங்கிருந்து இவர் கோபத்தில் உழல்வதைக் காட்டிலும் போருக்குச் செல்வதே சிறந்தது. அரங்கத்துப் பெருமான் அளித்த அருட்பிராசதம் என எண்ணினான். திருமலைராய நாயக்கருடன் தென்காசிக்கு சென்றான். மனதில் ஒரு வெறுப்பு. அது வெறியாக மாறியது. போர் மிகவும் கடுமையாக இருந்தது. அவன் மனம் சுழன்றது. அதற்கேற்ப கை சுழன்றது. ஒரு வினாடி நின்று கதற வேண்டும் போல் தோன்றியது. நின்றான் ஓவென ஒரு ஓலம் கொடுத்தான். என்ன விந்தை! இவன் முன்னே செல்லப்பன் நின்று கொண்டிருந்தான். அவன் கரத்திலிருந்த கத்தி வீழ்ந்தது. கரம் தளர்ந்து தலை தாழ்ந்து தோற்று நின்றிருந்தான் செல்லப்பன். படைகள் சிதறி ஓடின. மறுபுறம் தும்பிச்சி நாயக்கரை வென்று கைதாக்கி இழுத்துக் கொண்டு வந்தனர் திருமலைராயரின் வீரர்கள். சேர மன்னன் ஓடினான். தும்பிச்சி நாயக்கனையும் செல்லப்பனையும் கைதிகளாக இழுத்து வந்து ஸ்ரீரங்கத்தில் அச்சுததேவராயர் முன் நிறுத்தினார் திருமலை தேவர். செல்லப்பனைப் பார்த்ததும் அரசர் கோபம் எல்லை கடந்தது. இவர்கள் இருவரும் என்ன ஆனார்கள் என்று வரலாற்றுக்கே தெரியாத வகையில் முடித்து விடுங்கள் என்று கர்ஜித்தார். அதன் பிறகு தும்பிச்சி நாயக்கனும் செல்லப்பனும் என்ன ஆனார்கள்? யாருக்கும் தெரியாது.
அரசர் இவ்வாறு ஆணையிட்டபோது தேவி திருமலாம்பாள் உடன் இருந்தாள். அரசர் அவளைப் பார்த்தார். திருமலை தேவரின் பின் நின்று கொண்டிருந்த செவ்வப்பனைப் பார்த்தார். அம்பாள் எங்கே? என்றார். அம்பாளை அழைத்து வந்தனர். செவ்வப்பனை அழைத்து அணைத்துக் கொண்டார். "நீயும் அமபாளும் என் மலர்வனத்தில் விஜயநகரத்தில் மலர்ச் செடியின் பின்னர் அமர்ந்திருந்தீர்களே? அன்றே பார்த்து விட்டேன். நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நேசிக்கிறீர்கள் எனக்குத் தெரியும். அதனால் தான் உன்னை என் அடப்பக்காரனாக அமர்த்திக் கொண்டேன். ஆனால் நீ நான்காம் வர்ணத்தில் உதித்தவன். ஜாதியில் சூத்ர வம்சம். நான் ஷத்திரியன். அதனால் நீ எப்படி என் மைத்துனியை மணக்க முடியும்? உனக்கு அத்தகுதி இல்லை என சிலர் எண்ணினர். ஆனால் உன் வீரமும் ஆற்றலும் முற்றிலும் நான் அறிவேன். என் மைத்துனி மூர்த்திமாம்பாள் என் அன்புக் குழந்தை போன்றவள். அன்புக்குகந்த உன்னையே அவளுக்கு திருமணம் செய்து வைக்கத் தீர்மானித்தேன். இருப்பினும் அரசுப் பொறுப்பேற்பவர்கள் போராற்றலும் பெற்றிருக்க வேண்டும். அதனால் தான் உன்னை இப்போருக்கு அனுப்பினேன். உன் வீரத்தைக் கண்டு மற்றவர் இப்போது தலை குனிவர். அரசும், ஆற்றலும், திறனும், அன்பும் ஜாதிக்கு அப்பாற்பட்டவை. அம்பாளை உனக்கு மணம் செய்து வைக்கிறேன். இத்திருமணத்துக்கு என் அம்பாளுக்கு ஸ்ரீதனமாக இந்த சோழ நாட்டையே உனக்கு அளிக்கிறேன். இன்றிலிருந்து சோழ நாடு முழுமைக்கும் நீயே அரசன்" என்று கூறினார். அச்சுதராயரின் பெருந்தன்மை கண்டு குழுமியிருந்தோர் வியப்பில் மூழ்கினர். செவ்வப்பனும் மூர்த்திமாம்பாளும் அச்சுத தேவ மகாராயர் காலை ஆனந்தக் கண்ணீரால் நனைத்தனர்.
இது கதையல்ல உண்மை வரலாறு. விஜயநகர அரசர் அச்சுத தேவராயரின் தேவி திருமலாம்பாள் என்பவளின் தங்கை மூர்த்திமாம்பாள் என்பவளை தனது அடப்பம் சின்ன செவ்வப்பன் என்பவருக்கு மணம் செய்வித்து ஸ்ரீதனமாக தஞ்சாவூர் சீர்மையையும் 1532ல் கொடுத்தார். செவ்வப்பன் செவ்வப்ப நாயக்கர்" என்றழைக்கப்பட்டார். இவ்வாறு தான் தஞ்சாவூர் நாயக்கர் வம்சம் தோன்றியது. தஞ்சை நாயக்கர்கள் மன்னாரு கோத்திரத்தைச் சார்வார்கள். நான்காவது வர்ணத்தைச் சார்ந்தவர்கள். 1532ல் செவ்வப்ப நாயக்கர் தொடங்கி 140 வருடங்கள் 1675 வரை சோழ நாட்டை சீரும் சிறப்புமாக ஆண்டவர்கள் இழ்வழி வந்தவர்களே. செவ்வப்பன் கொண்ட அன்பெனும் ஆசையில் உதித்த அரசே தஞ்சாவூர் நாயக்க வம்சம். இதற்கு காரணமாக இருந்த மூர்த்திமாம்பாளின் உலோகச் சிலை திருவிடை மருதூர் கோயிலில் இன்றும் உள்ளது. இந்த நாயக்க மன்னர்கள் தாம் இசைக்கும் நாட்டியத்துக்கும் நாடகத்துக்கும் அரும் தொண்டு ஆற்றினார்கள். தாங்களே ஏராளமான நாட்டிய நாடகங்களை இயற்றியுள்ளார்கள். இவர்களது அவையில் பல பெண்கள் சிறந்த கவிஞர்களாகத் திகழ்ந்துள்ளனர். இன்று தமிழ்நாட்டில் பரதநாட்டியம் மிகச் சிறந்த நிலை வகிக்கிறது என்றால் அதற்கு இவர்களே காரணம் எனில் மிகையாகாது.