அழகுக்கும் இன்பத்துக்கும் இருப்பிடம் காமன் என்றும் அனங்கன் என்றும் அழைக்கப்படும் மன்மதன். அவனது தேவி ரதியோ பெண்மை எழிலின் சிகரம். அவளை அழகில் விஞ்சுவோர் யாருமில்லை. ஆதலால் மன்மதனக்கு வேறு எந்தப் பெண்ணும் அழகாகவே கண்ணில் படமாட்டார்களாம். அப்பேர்ப்பட்ட மன்மதனே பார்த்தால் அசந்து உட்கார்ந்துவிடும் வகையில் அழகான ஒருபெண் இருந்தால் எப்படி இருக்கும். ஒரு பெண் இருந்தாலே போதும். பல பெண்கள் இருந்தால் என்ன யோசிக்கிறீர்கள்? அண்மையில் நமக்கு அப்படிப்பட்ட 25 பெண்கள் கிடைத்திருக்கிறார்கள்.
குஷாணர் என்ற அரச மரபினர் இந்தியாவில் வடமேற்குப் பகுதியில் 2000 ஆண்டுகளுக்கு முன் ஆண்டனர். கனிஷ்கன், வாசுதேவன் போன்ற புகழ் வாயந்த அரசர்கள் இவ்வம்சத்தைச் சார்ந்தவர்களே. இவர்களது காலத்தில்தான் இப்பெண்கள் தோன்றினார்கள்.
பஞ்சாப் மாநிலத்தில் லூதியானா மாவட்டத்தில் சங்கோல் என்ற ஊர் உள்ளது. அங்குத் தொன்மைச் சான்றுகள் உள்ளதைக் கடந்த 50 ஆண்டுகளாக வல்லுநர் அறிவர். அங்குமிங்குமாகக் தோண்டியும் பார்த்துள்ளனர். ஏதும் சிறப்பாகக் கிடைக்கவில்லை. ஒரு பௌத்த ஸ்தூபம் இருந்த தடயங்கள் மட்டும் தெரிந்தன. சில ஆண்டுகளுக்கு முன் 1985இல் எப்பொழுதும் போல் பஞ்சாப் மாநிலத் தொல்பொருள் துறையைச் சேர்ந்தவர் அகழ் வாய்ந்து கொண்டிருந்தார். தூங்கி வழிந்து கொண்டு ஆராய்ச்சி நடந்து கொண்டிருந்தது. தீடிரென குழியைத் தோண்டிக் கொண்டிருந்த கூலிக்காரர் புதுமாதிரியான செங்கல் கண்டுபிடித்ததாக ஓடி வந்து கூறினார். தொல்லியில் வல்லுநர் ஓடிப்போய்ப் பார்த்தார். அது செங்கல் அல்ல. உண்மையான கல். தில்லி செங்கோட்டை கட்டியிருக்கிறார்களே அது போன்ற சிவப்பு நிறமான கல். அங்குலம் அங்குலமாக மண்ணை அகற்றி அக்கல் தெரியும்படி செய்தார் அவ்வளவுதான். அப்படியே மூர்ச்சை போட்டு விழுந்துவிட்டார். எழிலே உருவான ஒரு பெண் அங்கு புதையுண்டு இருந்தாள். மெதுவாக சுற்றியுள்ள மண்ணை அகற்றி அவளை வெளியே எடுக்கப் பார்த்தார். அவருக்கு மேலும் ஒரு வியப்பு காத்திருந்தது. மேலும் ஒரு பெண். அவ்வளவுதான் கேட்க வேண்டுமா! அடாடா நான் அப்போது அங்கு இல்லையே நமக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கவில்லையே என்று இன்றும் என் மனம் ஏங்குகிறது. நீங்கள் ஏதாவது நினைத்துவிடாதீர்கள். அந்த இடத்தில் ஒன்றல்ல இரண்டல்ல 117 சிற்பங்கள் அழகாக வரிசை வரிசையாக அடுக்கி பத்திரமாகப் புதைந்து கிடந்ததைக் கண்டனர். அவை வெளிவந்த அன்றே கலையுலகம் வியப்பில் மூழ்கியது. கலைச்சிறப்பு வாய்ந்த குஷாணர் காலத்துச் கலைச் செல்வங்கள் ஓரே இடத்தில் இவ்வளவு கிடைத்துள்ளது இதுவே முதல் தடவையாகும். சங்கோல் உலகப் புகழ் வாய்ந்த தலமாக மாறிவிட்டது.
சங்கோல் என்பது புத்த சமயம் சிறப்பாகத் திகழ்ந்த இடம் என்று அங்கு எஞ்சிய பௌத்த ஸ்தூபியிலிருந்து தெரியும் சங்காலயம் அல்லது சங்கபுரம் என்று முற்காலத்தில் பெயர் பெற்றிருந்த நகரே இன்று மருவி சங்கோல் என்று அழைக்கப்படுகிறது. குஷாண அரசர்களது உள்நாட்டுத் தலைநகர்களில் ஒன்றாக இது திகழ்ந்திருக்க வேண்டும். 2000 ஆண்டுகளுக்கும் மேலாகவே இது தலைநகராகத் திகழ்ந்துள்ளது. பஞ்சாப் மாநில அரசு இவ்வகழ் வாராய்ச்சியின் பெருமையைக் கண்டு ஏராளமான பொருள் செலவு செய்து ஆராய்ச்சியைத் தீவிரமாக்கியுள்ளது. இதன் பயனாக குஷாணர் காலத்து அரண்மனைப் பகுதி ஒன்று இப்பொழுது வெளிக் கொண்டு வரப்பட்டுள்ளது. பல பண்டைய காசுகளும் முத்திரைகளும் வெளிப்பட்டுள்ளன. சில நாட்களுக்கு முன்னர் கூட வரலாற்றுச் சிறப்பு மிக்க முத்திரை கிடைத்துள்ளதாக அறிந்தேன்.
புத்த பெருமானின் புண்ணிய அஸ்திகளைத் தாங்கிய குடுவை ஒன்று கிடைத்துள்ளது. அதன் மூடியில் கி.மு. முதல் இரண்டாம் நூற்றாண்டு எழுத்துக்கள் உள்ளன. கரோஷ்டி என்ற எழுத்தில் உள்ள அந்தக் குடுவையை உபாஸகன் ஆர்யபத்ரன் என்பவர் குடுத்தாகத் தெரிகிறது. முதல், இரண்டாம் நூற்றாண்டு பிராம்மி எழுத்துக்களும் கரோஷ்டி எழுத்துக்களும் பொறித்த ஏராளமான காசுகளும், பிற பொருள்களும் இங்குக் கிடைத்துள்ளன. போரஸ்ஸின் முத்திரை ஒன்று கிடைத்துள்ளது. இதுவரை கிடைத்துள்ள காசுகளில் கனிஷ்கன், வாசுதேவன் வேமா காட்பீஸஸ், கிடார், குஷாணர் முதலியோர் காசுகள் குறிப்பிடத் தகுந்தவை. குப்தப் பேரரசன் சமுத்திர குப்தனின் தங்கக் காசு ஒன்றும், முதல் சந்திரகுப்தனின் செப்புக்காசும் கிடைத்துள்ளன. கி.பி. நாலாம் நூற்றாண்டில் குப்தப் பேரரசின் கீழ் “மகாராஜா கபிலநியுக்தஸ்ய அதிகரண” என்ற அதிகாரியின் கீழ் இந்நகர் இருந்தது என்பதற்கு அடையாளமாக இவனது முத்திரைகள் ஏராளமாகத் கிடைத்துள்ளன. கடந்த ஒரு மாதத்திற்குள் மஹாசேனாதிபதி ஒருவனின் முத்திரை கிடைத்ததாகச் செய்தி வந்துள்ளது. மிஹிரகுலன், தோரமானன் ஆகியோரின் பல காசுகளும் கிடைத்துள்ளன. மிஹிரகுலனுடைய ஒரு செப்பு முத்திரையும் கிடைத்துள்ளது. இவற்றிலிருந்து புத்தர் காலம் தொடங்கி குஷாணர், குப்தர் ஆகியோரின் ஆட்சியில் இந்நகர் திகழ்ந்துள்ளது எனத் தெரிகிறது.
இவ்வளவு சிறப்பாகத் திகழ்ந்த நகரம் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் தனது பெருமையை இழந்துவிட்டது என அறிகிறோம். சீன யாத்ரீகர் ஹூவாங்சுவாங் இந்நகரைப் பற்றிக் குறித்துள்ளார். “இங்கு வாழும் மக்கள் தமக்குள் சமுதாய வேறுபாடுகள் இருப்பினும் சீலத்துடனும் அன்புடனும் நல்ல வாழ்வு வாழ்கிறார்கள். புத்தர் வழியைப் பின்பற்றுகிறார்கள். இந்நகரில் பத்து பௌத்த விஹாரங்கள் இருக்கின்றன. ஆனால் இவை வெறிச்சோடியுள்ளன. பௌத்த பிக்குகள் மிகவும் குறைவாகவே உள்ளனர். இங்கிருந்து இரண்டு கல் தொலைவில் அசோகரால் 200 அடி உயரமுள்ளதாகக் கட்டப்பட்ட பௌத்த ஸ்தூபம் இருக்கிறது.” என்று குறித்துள்ளார். இக்குறிப்பிலிருந்து இந்நகர் 7 ஆம் நூற்றாண்டில் தனது பொலிவு இழந்துவிட்டது எனத் தெரிகிறது.
சுமார் கி.பி. 460ல் மத்திய ஆசியாவிலிருந்து ஹூணர்கள் என்போர் வடமேற்கு இந்தியாவின் மீது படையெடுத்து வந்தனர். பௌத்த ஸ்தூபங்களை எல்லாம் சூறையாடினர். தக்ஷசீலத்திலிருந்த பௌத்த ஸ்தூபங்களும் விஹாரங்களும் இடிக்கப்பட்டுக் கொள்ளையிடப் பட்டுப் பரிதாபமான நிலைக்கு ஆளாயின. ஹூணர்களின் கொள்ளையடிப்பைப் பல சான்றுகள் உறுதி செய்துள்ளன. அவர்களது கொள்ளை இப்பகுதியில் வாழ்ந்த மக்களின் மனத்தில் பீதியைத் தோற்றுவித்திருக்க வேண்டும். ஆதலின் இங்கு வாழ்ந்த பெத்த பிக்குகளும் ஏனையோரும் தமது பௌத்த ஸ்தூபத்தை அலங்கரித்த சிற்பங்களைப் பாதுகாக்க முற்பட்டனர். ஸ்தூபத்தின் மேல் ஒரு பகுதி உண்டு. அதை வேதிகை என்று அழைப்பர் குத்துக் கல்லும், குறுக்குக் கல்லும் கொண்டு அமைக்கப் பெறும் இவற்றில்தான் அழகான சிற்பங்களும் வடிக்கப்பட்டிருக்கும்.
சங்கபுரவாசிகள் ஹூணர்களுக்குப் பயந்து தமது வேதிகையைக் கலைத்து சிற்பங்களையும், ஸ்தம்பங்களையும் ஒழுங்காக பூமிக்கடியில் பாதுகாப்பாகப் புதைத்திருக்க வேண்டும். அதனால்தான் இத்தனைச் சிற்பங்களும் ஓரே இடத்தில் புதையுண்டு இப்போது கிடைத்துள்ளன.
இந்த வரலாற்றுப் பின்னணியில்தான் முதலில் கூறிய பெண்களைக் காணவேண்டும். இவர்கள் எல்லாம் வனத்தே மரங்களில் உறை அணங்குகள் (விருக்ஷைகள்) என்றும், இயக்கிகள் (யக்ஷி) என்றும் வல்லுநர் கூறுவர். நம்மைப் பொருத்தவரை எழிலே உருவான அணங்குகள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணங்களில் நிற்கின்றனர். இளமையின் துடிப்பும் எழிலும் இவர்களது உடற்கட்டில் காணப்படுகிறது. ஒருத்தி கண்ணாடி காண்கிறாள். மற்ரொருத்தி ஒரு கரத்தில் மதுக்குடம் தாங்கி மறு கரத்தில் குழல் ஏந்தி நிற்கிறாள். இன்னொருத்தி மதுக்கிண்ணத்திலிருந்து மதுவைச் சுவைத்து அருந்தும் மாதாவாக காணப்படுகிறாள். மலர் ஏந்தி நிற்பாள் ஒருத்தி. உண்டியைத் தட்டில் ஏந்தி நிற்பாள் மற்றொருத்தி. கூந்தலைப் பிழிவாள் ஒருத்தி. குழவியைக் கொஞ்சுவாள் ஒருத்தி. பல பெண்கள் அரையில் ஆடையே அணிந்து கொள்ளாமல் நிற்பது போல் இருக்கிறார்கள். உண்மை அதுவன்று. அவர்கள் ஆடை அணிந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவை மெல்லிய பட்டுத் துகில்கள். “டிரான்ஸ்பேரண்டாக” தெரிகிற மாதிரி பட்டுத் துகில்களை வனைவோர் அக்காலத்தில் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. அது போன்ற ஆடைகளை விரும்பிய பெண்களே அதிகம் என்று தெரிகிறது. அவர்கள் இடையில் காசுகளாலேயே செய்யப்பட்ட அணியை அணிந்திருக்கிறார்கள். இதை எல்லாம் ஆராய்ச்சியாளர் பார்த்தால் அணிகள் ஆடைகள் பொருளாதாரம் இவற்றை ஆராய்ச்சி செய்யத் தொடங்கிவிடுவர். 1800 வயது நிரம்பிய கல்லிலே கடைந்தெடுத்த காரிகையரின் கலையம்சமே இவ்வூருக்குப் பெருமை சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.
37.1. காலம் மாறிப்போச்ச
ராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி அரசர் முத்து விஜயரகுநாத சேதுபதி
இங்கு படத்தில் ஒரு மொகலாய அரசர் நம் நாட்டுப் பெண்களுடன் வருவது போலும், அவரைச் சிலர் வரவேற்பது போலும் ஒரு ஓவியத்தைப் பார்க்கிறோம். அவர் முழுக்கைச் சட்டையும், கோடு போட்ட பைஜாமாவும் அணிந்திருக்கிறார். அது மிக மெல்லியதாக உள்ளே அணிந்திருக்கும் பைஜாமா வெளியில் தெரியும் வகையில் இருக்கிறது. பூக்கள் போடப்பட்டுள்ள அதன் நுனியில் ஜரிகை வேலைப்பாடு உள்ளது. தலையில் மொகலாய டர்பன். இவர் யார் என்று நினைக்கிறீர்கள். மொகலாயர் உடையில் காணப்படும் இம் மன்னர் உண்மையில் தமிழ் நாட்டு மறவர் குல மன்னர்தான்.
இவர் ராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி அரசர் முத்து விஜயரகுநாத சேதுபதி. புகழ் வாய்ந்த கிழவன் சேதுபதிக்குப் பின்னர் கி.பி. 1710 இல் அரியணை ஏறிய சேதுபதி மன்னரைத்தான் இந்த ஓவியத்தில் காண்கிறோம். மற்றுமொரு ஓவியத்திலும் இதே உடையில் இவர் காணப்படுகிறார். இதில் இவரது குலதெய்வமான ராஜ ராஜேஸ்வரி தேவியிடம் இருந்து செங்கோல் வாங்குவதாக படம் சித்தரிக்கப்பட்டுள்ளது. முடி சூடும் போது அரசர் செங்கோல் பெறுவது மரபு. ஆதலின் முடி சூடும் பொழுது விஜய ரகுநாத சேதுபதி இந்த உடையே அணிந்திருந்தார் எனத் தெரிகிறது. மூன்றாவதாக மற்றும் ஒரு படம் உள்ளது. அதில் இஸ்லாமியர் உடையில் காணப்படுகிறார். அவர் மண்டியிட்டு உட்காந்திருப்பது கூட இஸ்லாமியர் பாணியில் இருக்கிறது. அவர் அணிந்திருக்கும் ஆடைகளும் (ஜாமாஇஸ்ஸார் என்பவை) அப்படியே உள்ளன. தலையில் இஸ்லாமிய வீரர் அணியும் ஹெல்மட் (ஸர்குல்லா) அணிந்திருக்கிறார். அதிலிருந்து பின் கழுத்தை மறைத்துக் கொண்டு பின் முதுகில் கழுத்தணி விழுகிறது. இது முன் கழுத்தையும் சுற்றிப் பாதுகாப்பாக விளங்குகிறது. இடது தோளின் மீது நீண்ட வாள் ஒன்றைச் சாத்தி வலது கரத்தில் மலர்ச் செண்டு ஒன்றை வைத்துள்ளார். இடுப்பில் கடாரி சொருகப்பட்டுள்ளது. நன்கு கத்தரித்துவிட்ட தாடியும் மீசையுமாக உள்ள இவரது உருவத்தைப் பார்த்தால் ஓவியங்களில் வரும் முகலாய அரசர்களைப் போலவே உள்ளது.
சேதுபதி அரசர்கள் அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்த இராமநாதபுரத்தில் தான், இராமலிங்க விலாஸத்தில் தான் இந்த ஓவியங்கள் இருக்கின்றன. ராமலிங்க விலாஸ் முழுவதும் இவரது ஓவியங்கள் உள்ளன. பல காட்சிகளில் பங்கு கொள்வது போல முத்து விஜய ரகுநாத சேதுபதியின் உருவம் அங்கு காணப்படுகிறது. சில காட்சிகளில் இவரது பெயரும் எழுதப்பட்டுள்ளன. பல இடங்களில் இவர் தமிழ் நாட்டு உடையில் வேஷ்டி அங்கவஸ்திரம் பூண்டும் காணப்படுகிறார். தமிழ் நாட்டு மன்னர் மொகலாயர் உடையை ஏன் அணிய வேண்டும்? வியப்பாக இருக்கிறது அல்லவா?
இராமநாதபுரம் சீமையை சேதுபதி அரசர்கள் நாயக்கர்களுக்கு கீழ்ப்பட்டவர்களாக 1718 ஆம் நூற்றாண்டுகளில் ஆண்டனர். 1650ல் ஆண்ட திருமலை நாயக்கர் பீஜாபூர் சுல்தான்களின் உதவியைப் பெற்றார். தஞ்சாவூரில் பீஜாபூர் சுல்தான்களின் கீழ்ப்படிந்த ஏகோஜி மராத்திய அரசை தோற்றுவித்தார். கி.பி. 1700 மொகலாய அரசன் ஒரங்கசீப்புக்கு கப்பம் கட்டும் அரசாக மதுரை ராணி மங்கம்மாள் இருந்தார். ராணி மங்கம்மாளுக்குப் பிறகு மதுரை அரியணை ஏறியவர் முத்து விஜயரங்க சொக்கநாத நாயக்கர் ஆவார். கி.பி. 1630லிருந்து 1730க்குள் ஒரு நூறு ஆண்டுகளில் மொகலாய ஆட்சி வலுத்துவிட்டது. தமிழ் நாட்டிலும் அவ்வாட்சியால் ஏற்பட்ட விளைவுகள் புகுந்து விட்டன. மொகலாய அவையில் இருந்த மரபுகள் அவர்களது ஆடை அணிகலன்கள் எல்லாம் இங்கு வந்துவிட்டன.
தமிழ்நாட்டை ஆண்ட அரசர்கள் எல்லாம் மொகலாயர் போல ஆடைகள் அணிந்து கொள்ள ஆரம்பித்துவிட்டனர். அரச சபையில் இருந்த பிரதானிகளும் அப்படியே. “சலாம்” போடும் வழக்கமும் அவ்வாறே வந்தது. மதுரை விஜயரங்க சொக்கநாத நாயக்கர் கூட மொகலாயர் உடையில் விளங்கினார். ஸ்ரீரங்கம் தாயார் கோயிலில் அவரது ஓவியம் ஒன்று உள்ளது. இதில் அவர் மொகலாயர் உடையில்தான் இருக்கிறார். அடடா என்ன இப்படி ஆகிவிட்டதே என்று வருந்துகிறீர்களா? காலம் மாறிப்போச்சு அவ்வளவுதான். வெள்ளைக்காரர்கள் வந்ததும் நாம் ஹேட், டை, சூட்டு போட்டுக் கொள்ள ஆரம்பித்து விட்டோ மல்லவா? பழையன கழிதலும் புதியன புகுதலும் பண்டைய மரபுதானே!
இராமநாதபுரத்து இராமலிங்க விலாஸம் முழுவதும் ஓவியம் தீட்டப்பட்டு விளங்குகிறது. இந்த ஓவியங்களில் அன்றைய சேதுபதிகளின் ஆடை அணிகலன்கள் பழக்க வழக்கங்கள் இசை நாட்டியம் ஏன் மதுபானப் புட்டிகள் கூட எனப் பலவும் அழகாகவும் மிகவும் சிறப்பாகவும் வரையப்பட்டுள்ளன. இவற்றைப் பொதுமக்கள் எல்லோரும் பார்க்க வேண்டும் என்று பெருமிதமான உள்ளத்தோடும், உவகையோடும் காலஞ்சென்ற சேதுபதி மன்னர் அவர்கள் அரசிடம் ஒப்படைத்துள்ளார்கள். ஏராளமான ஓவியங்கள் உள்ள இம்மாளிகை பொதுமக்களின் பார்வைக்காகத் திறந்து வைக்கப்பட்டுத்தான் இருக்கிறது. நம் வரலாற்றையும் கலையையும் எல்லோரும் காணலாமே.