39. சயாம் சிற்பம் பர்மா எழுத்து தமிழர் கொடை

[தவம் செய்த தவம்; இரா.நாகசாமி]
அத்தியாயம் 38 | Contents | அத்தியாயம் 40 | Home

சார், வீபூதி பிரஸாதம் வாங்கிகோங்கோ! என்று ஏதோ நினைப்பில் மூழ்கி இருந்த என்னைக் கூப்பிட்டார் தியாகராஜ சுவாமியை ஆராதிக்கும் குருக்கள். நான் திருவாரூரில் தியாகராஜ சுவாமி சந்நிதியில் அப்பொழுது நின்று கொண்டிருந்தேன். திருவாரூர் தியாகராஜரின் தெய்வீக அழகை எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். எவ்வளவு பெரியார்களின் மனதில் பக்திப்பெருக்கையும், நுண்ணிய கலை உணர்வையும், இசை வெள்ளத்தையும் தோற்றிவைத்த பெருமான் இவர்! அப்பர், சம்பந்தர், சுந்தரர், மனுநீதி சோழர், முசுகுந்த சக்ரவர்த்தி போன்ற ஆன்றோர்கள் எல்லாம் உய்ந்த இடம். முதலாம் இராஜேந்திரன் காலத்தில் அவனுடைய அணுக்கி பரவை என்பவள்தான் இப்பொழுதுள்ள தியாகேசர் கோயிலை கருங்கல்லால் கட்டினாள். அவளது பக்தியில் இராஜேந்திர சோழனுக்கு அளவில்லாத ஈடுபாடு. அவளை தன் தேரில் ஏற்றி தன் அருகில் வைத்துக கொண்டான். திருவாரூரை சுற்றி உலாவாக அழைத்து வந்தான். தியாகேசர் முன்னர் இருவரும் அருகேயே நின்று வணங்கினர். அந்த இடத்தில் இராஜேந்திரன் ஒரு விளக்கு செய்து வைத்தான். அந்த இடத்தில் தான் நான் இப்பொழுது நின்று கொண்டிருந்தேன். சோழர்களுக்கு மனதுக்கு பிடித்த தெய்வம் தியாகேசர். அதுபோல் பின்னர் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களும் தியாகேசரிடம் அளவில்லா பக்திபுண்டிருந்தனர். மராட்டிய மன்னர் காலத்தில் திருவாரூர் தியாகேசப் பெருமான் மீது பல நாட்டிய நாடகங்கள் இயற்றப்பட்டன. அவ்வாரு இயற்றபட்ட தியாகேசர் குறவஞ்சி என்ற நாடகம் அண்மைக்காலம் வரையில் இக்கோயிலில் நாட்டியமாக நடிக்கப்பட்டு வந்தது. இவையல்லாம் அப்பொழுது என் நினைவிற்கு வந்தன. தியாகேசருக்கு பக்கத்தில் இரண்டு வாள்கள் உரையிட்டு வைக்கப்பட்டிருக்கும். ராஜா அல்லவா, தியகராஜர் ஆதலால் அவர் அருகில் வேறு எங்கும் காணமுடியாத இரண்டு வாள்கள் தரிசிக்கலாம். பண்டையகாலத்தில் அரசர்கள் வாள்களை தெய்வசக்தி உடையவாளாக கருதினர். அவற்றிற்கு வழிபாடும் செய்தனர். தெய்வத்திடம் இருந்து தங்களது வாள்களை பெற்றுப் போருக்குச் செல்லும் மரபும் உண்டு. தியாகராஜரின் அருகில் வைக்கபட்டிருக்கும் இந்த கத்திகளைப் பார்த்தபோது சோழ அரசர்களுடைய நினைவும் அவர்கள் காலத்தில் இருப்பது போன்ற ஒரு பிரமையும் எனக்கு இருந்தது. அந்த நினைவில் ஆழ்ந்திருந்ததால் ஆராதனை செய்யும் குருக்கள் வந்ததை நான் கவனிக்கவில்லை. அதனால் தான் அவர் என் கவனத்தைத் திருப்ப வேண்டியதாயிற்று.
விபூதி பாத்திரம்
பழைய வரலாற்றிலும் கலையைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்த எனக்கு அவர் கையில் வைத்திருந்த விபூதி பாத்திரம் கண்ணில் பட்டது. விபூதியை வாங்கிக கொண்டே அந்த பாத்திரத்தை உற்று பார்க்க ஆரம்பித்தேன். அவர் அந்த பாத்திரத்தை எனக்கு காண்பித்தார். வெள்ளியிலான அந்தப் பாத்திரம் எனக்கு வியப்பை அளித்தது. அது நம்நாட்டில் செய்யப்பட்டது அல்ல. பர்மா, மலேசியா முதலிய நாடுகளைத் தாண்டி சயாம் நாட்டில் செய்யப்பட்ட அருமையான ஒரு கலைப் பொருள் அது. வெள்ளியால் ஆனது. அதைச் சுற்றிலும் எழிலான உருவங்கள் இடம் பெற்றிருக்கின்றன. அனுமான், வாலி, சுக்ரீவன், காகுத்தன் அவர்களது உருவங்களும், உயிர்துடிப்போடு கூடிய யானை, சிங்கம், இவைகளின் உருவங்களும் அதில் காணப்படுகின்றன. சிங்கத்தினுடைய முகம் சயாம் நாட்டுச் சிற்பம் என்று தெளிவாகக் காட்டுகிறது. அதேபோல் தான் வாலி, சுக்ரீவன், அனுமான் ஆகியோருடைய உருவமும், ஆடை அணிகளன்களும் காணப்படுகின்றன. ஆனால் அந்த பாத்திரத்தில் விளிம்பில் தமிழில் ஒரு வாசகம் பொறிக்கப்பட்டிருக்கிறது. அது ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டதாக தோன்றுகிறது. அதில். வங்காரம் பேரையூர் சடையப்பப்பிள்ளை மகன் ஆறுமுகத்தாபிள்ளை தியாகராஜசாமிக்கு உபயம் எடை ரூ. 23.5 என்று தமிழ் எழுத்தால் எழுதபட்டிருக்கிறது. இது எனக்கு வியப்பை அளித்தது. அந்த பாத்திரத்தை வாங்கி பார்த்தேன். அதன் அடிப்பகுதியில் புரியாத எழுத்தில் ஏதோ எழுதியிருந்தது. நம்பர் 85 என்ற ஒரு எண்ணும், ஒரு சிங்கத்தின் உருவமும் அதில் காணப்பட்டன. அதை படம் எடுத்து வந்தேன். அதை அடையாரில் வசிக்கும் நண்பர் டும்சைன் என்பவரிடம் காண்பித்தேன். அவர் அது பர்மா மொழியில் பர்மிய லிபியால் எழுதப்பட்டிருக்கிறது என்று கூறினார். அவர் அன்போடு வாசித்து தந்த செய்தி இது. மாங்குவே என்ற பெண்மணியுடையது இந்த பாத்திரம், இதனுடைய எடை 17 ரூபாய் 12 அணா என்று எழுதப்பட்டிருக்கிறது என்று கூறினார். 89 என்பது அந்த பெண்மணி தன்னுடைய பதிவேட்டில் இட்ட எண்ணாக இருக்ககூடும். ஆனால் இந்தப் பாத்திரத்தின் கலைப் படைப்பை காணும் பொழுது இது பர்மாவில் செய்யபட்டது அல்ல என்று தெரிகிறது. சயாம் நாட்டைச் சார்ந்தது என்றும், சயாம் நாட்டிலிருந்து பர்மாவுக்கு வந்து, அங்கிருந்து தமிழ்நாட்டைச் சார்ந்தவர் அதை வாங்கி வந்து திருவாரூரில் தியாகேசர் கோயிலில் கொடுத்து இருக்கிறார் என்பது தெரியவந்தது. கலைப் பொருள்கள் தேசத்தைக் கடந்து காலத்தைக் கடந்து மனித குலதை இணைக்கவல்ல சக்தி வாய்ந்தவை என்பதை இப்பாத்திரம் நமக்கு எடுத்துகாட்டுவது போல் எனக்கு தோன்றிற்று. பல பொருள்களை வெறும் உயிரற்ற கலைப் பொருள்களாகவே காண்போர் உண்டு. ஆனால் நம் நாட்டவர் எவை எவை எல்லாம் உயர்ந்த படைப்புகளோ அவற்றை தெய்வத்துக்கு அர்பணித்து அதில் பேரின்பம் கண்டனர். இதைக் கொடுத்த ஆறுமுகத்தா பிள்ளை அந்த மரபைப் பின்பற்றி இருக்கிறார். எத்தனையோ இலட்சக்கணக்கான மக்களுக்கு இந்த அருமையான கலத்திலிருந்து தியாகேசருடைய அருட் பிரஸாதமாக விபூதி கொடுக்கும் கலனாக இது திகழ அந்த அன்பர் கோயிலுக்கு கொடுத்திருக்கிறார். கலைகள் எல்லாம் வந்து சேரும் புண்ணிய இடமாக கோயில்கள் திகழ்ந்தன என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு என்ற நினைப்போடு விபூதி தரித்துக் கொண்டு வெளியே வந்தேன். அப்போது என் மனதில் சயாம், பர்மா, இந்தியா ஆகிய மூன்று நாடுகளிலும் நான் இருப்பது போன்று உணர்வு வெள்ளத்தில் மிதந்து வந்தேன்.
அத்தியாயம் 38 | Contents | அத்தியாயம் 40 | Home