இந்திய நாட்டிற்கும் சீன தேசதிற்கும் கி.பி. 5ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே கடல் வாணிகத் தொடர்பு இருந்தது. அதற்கு முன்னர் சங்க காலத்தில் மேலை நாடுகளுடன் தமிழகம் வாணிகத் தொடர்பு இருந்தது என அறிவோம். மேலை நாட்டிலிருந்து யவனர்கள் ரோமாபுரி, அலெக்சாண்டிரியா முதலிய இடங்களிலிருந்து கடல் வழியாக கப்பல்களில் தமிழ் நாட்டுக்கு வாணிகம் செய்ய வருவார்கள். தமிழ் நாட்டுடன் திரும்பி விடுவார்கள். அதற்கு கிழக்கே கடாரம் சுமத்ரா ஜாவா கம்போடியா சீனதேசம் வரையில் கடல் வாணிகத்தைத் தமிழ் நாட்டு மாலுமிகளும் வணிகர்களுமே செய்து வந்தனர் என ஆராய்ச்சியாளர்கள் கூறுவர். பாஹியான் என்ற சீன யாத்ரீகர் 200 இந்தியர்களுடன் ஸ்ரீலங்காவை சார்ந்தவர்களுடனும் பயணம் செய்திருக்கிறார். தஞ்சாவூர் மாவட்டத்தில் சீனதேசத்துக காசுகள் புதையல்களாக கிடைத்துள்ளன. இவ்வாறு கிடைத்த புதையல்களில் ஒன்று கி.பி. 6ம் நூற்றாண்டில் சீனவில் ஆண்ட “வூசு” காலத்தில் வெளியிடப்பட்டவை. மற்றொரு புதையல் கி.பி. 8ம் நூற்றாண்டில் “கைநான்” காலத்தில் சீனாவில் வெளியிட்ட நாணயங்கள் ஆகும். இக்காசுகள் தஞ்சையில் புதையலாக கிடைத்துள்ளதிலிருந்து அக்காலத்திலேயே வணிகர்களால் இங்கு கொண்டுவரப்பட்டுள்ளது எனத் தெரிகிறது.
சீனத்து யாத்ரிகர் ஹுவான்சுவாங் காஞ்சீபுரத்தைப் பற்றி சிறப்பான குறிப்புகளை அவர் கொடுத்துள்ளார். காஞ்சி நகரத்திலிருந்து தெற்கில் ஒரு பெரிய பௌத்த விஹாரம் இருந்தது. அங்கு இந்நாட்டின் தலைசிறந்த பெரியோர்கள் எல்லாம் வந்து செல்வர். புத்தபிரான் காஞ்சிக்கு வந்திருக்கிறார். இங்கு தீர்த்தங்கரர்களை வாதில் வென்றுள்ளார். அசோக மெரிய பேரரசன் இங்கு 100 அடி உயரத்திற்கு மேல் உயர்ந்த பௌத்த ஸ்தூப்த்தை எழுப்பினான். இந் நகரைச் சேர்ந்த தர்மபாலர் என்ற பிக்கு நளந்தா பல்கலைக் கழகத்திற்கு தலைவராக திகழ்கிறார். இங்கு நூற்றுக்கணக்கான ஆரமங்களும், பத்தாயிரக் கணக்கான பிக்குகளும் உள்ளனர். இங்கு பெரும்பாலானார் “ஸ்தவிரவாதம்” என்னும் பிரிவை விரும்பி படிக்கின்றனர். இது “மகாயானப்” பிரிவைச் சேர்ந்தது என்று எழுதியிள்ளார்.
கி.பி. 8ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சீன தேசத்தில் “காண்டான்” நகரில் இந்து சமயக் கோயில்கள் கட்டப்பட்டு அங்கு வழிபாடு நடந்தது. அதே காலத்தில் சீன அரசன் காஞ்சீபுரத்து பல்லவ அரசன் இரண்டாம் நரசிம்மன் (ராஜசிம்மன்) அனுமதி பெற்று நாகப் பட்டினத்தில் ஒரு புத்த விஹாரம் கட்டினான். இதை சீனாவிலிருந்து தமிழ் நாட்டுக்கு வரும் புத்த பிக்குகளுக்காக கட்டினான். அப்பொழுது நாகப் பட்டினம் வரையில் பல்லவர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. 1200 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட அந்த விஹாரம் சீனபகோடா என்ற பெயரில் சென்ற நூற்றாண்டு வரையில் இருந்தது. இந்த செய்தியை சீனதேசத்து பண்டைய நூல்கள் கூறுகின்றன. ஒரே சமயம் சீனாவில் நம் வணிகர்களுக்காக நம் கோயில்களும், இங்கு தமிழ் நாட்டில் சீன பிக்குகளுக்காக விஹாரமும் கட்டப்பட்டதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையில் அக்காலத்தே எவ்வளவு நெருங்கிய தொடர்பு இருந்தது என அறிந்து கொள்ளலாம்.
சோழருடைய பேராட்சி எற்பட்டபோது சீன நாட்டிலும் கடல் வாணிகம் சிறப்பாகப் போற்றப்பட்டது. அங்கு ஆண்ட அரசர்கள் கடல் வாணிகத்துக்கு ஊக்கம் அளித்ததுடன் தமது அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். சோழப் பேரரசர்கள் சீன தேசத்துக்கு தூதுவர்களை அனுப்பியிருக்கிறார்கள். தமிழகத்தின் தலைசிறந்த பேரரசன் முதலாம் இராஜராஜசோழன் 1012ல் ஒரு தூதூவர் குழுவை சீனாவுக்கு அனுப்பினான். அது மூன்று ஆண்டுகள் பயணம் மேற்கொண்டு 1015ல் சீன அவையை அடைந்தது. அப்பொழுது இராஜராஜன் இறந்துவிட்டான். இதற்கு பின்னர் கடாரம், சுமத்ரா, ஜாவா ஆகிய ஸ்ரீ விஜய நாட்டை வெற்றி கண்ட இராஜேந்திர சோழன் 1033ல் மீண்டும் சீனதேசத்திற்கு ஒரு தூதர் குழுவை அனுப்பினான். இக்குழுவில் 72 வணிகர்கள் அடங்கியிருந்தனர். இவர்கள் ஸ்படிகங்களால் ஆன பொருள்கள், கற்பூரம், தந்தம் முதலிய விலையுயர்ந்த பொருள்களை சீன அரசனுக்கு பரிசாக கொடுத்தனர். சீன அரசன் இவர்களுக்கு 81800 செப்புக் காசுகளைக் கொடுத்தான். இதைக் கூறும் சீன நூல்கள் குலோத்துங்கனையும் “திஹுவாகியாலோ” (தேவன் குலோத்துங்கன்) என்று குறிக்கின்றன.
விரைவில் சீனாவுக்கும் தமிழ் நாட்டுக்கும் வாணிகம் மிகவும் உயர் கட்டத்தை அடைந்தது. அதிலும் தமிழ் நாட்டுப் பொருள்களுக்கு எராளமான கிராக்கி. அதனால் சீனாவின் செல்வம் தமிழ் நாட்டுக்கு பருவாரியாக செல்லத் தொடங்கிவிட்டது. இதனால் சீனாவின் பொருளாதாரமே சீர்குலைந்துவிடும் என்று சீன அரசர்கள் கருதினர். அதனால் சீனாவின் காசுகளை குறிப்பாக தங்க காசுகளை தமிழ் நாட்டுக்கு எடுத்துச் செல்வதை 12ம் நூற்றாண்டில் தடை செய்தனர் என்று அறிகிறோம்.
என்னுடைய தலைமையில் கங்கை கொண்ட சோழபுரத்தில் தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறை அகழ்வாய்வு மேற்கொண்டது. அங்கு சோழர்களின் அரண்மனைப் பகுதிகளில் சீனத்து பீங்கான் பானை ஒடுகள் கிடைத்துள்ளன. இராஜராஜன் தமிழ் நாட்டை ஆண்டபோது சீனாவின் வடபகுதியில் ஆண்ட “ஹியோ” அரச மரபினர்களின் பச்சைப பானைகளும், குலோத்துங்கன் காலத்தில் அங்கு வனையப்பட்ட சைனா போர்சிலின்களும், “சுங்” போர்சிலின்களும் கிடைக்கின்றன. சோழர் மாளிகைகளில் சீனத்துப் பானைகளும் பீங்கான் பாத்திரங்களும் புழக்கத்திலிருந்திருக்கின்றன.
சமீபத்தில் ஹாங்காங்குக்கு வடக்கே சுவாங்சோ என்ற சீன கடற்கரைப் பட்டினத்தில் தமிழ் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்தமிழ்க் கல்வெட்டின் கீழே சீன எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து தவச் சக்கரவர்த்திகள் என்பவன் இங்கு “செகசைகான்” என்பவரின் நலத்துக்காக சிவன் கோயில் கி.பி. 1281ல் கட்டிவித்ததாக அறிகிறோம். இந்து சமய சிற்பங்களும் அங்கு இருப்பதாக கூறுகின்றனர். மார்கோ போலோ தமிழ் நாட்டிலிருந்து வணிகக் கப்பல்கள் சுவாங்சோ பட்டினத்துக்கு செல்வதாகக் கூறுகிறார்.
தமிழ் நாட்டுக்கும் சீன தேசத்துக்கும் தொடர்பு பண்டைய காலத்தே மிகவும் நெருக்கமாக இருந்திருக்கிறது. மேலை நாட்டையே பார்த்துக் கொண்டிருக்கும் ஆய்வாளர்கள் கீழை நாடுகளையும் காணலாமே.