41. சொல்லாமல் சொல்லும் கலை

[தவம் செய்த தவம்; இரா.நாகசாமி]
அத்தியாயம் 40 | Contents | அத்தியாயம் 42 | Home

கும்பகோணத்துக்கு அருகில் கொரடாச்சேரி பஞ்சாயத்து யூனியனைச் சேர்ந்த ஊர் பத்தூர் என்பது. இங்கு விசுவநாதசுவாமி கோயிலில் பின்புறமிருந்து பூமிக்கடியில் கிடைத்த நடராஜர் செப்புச் சிலையைத் திருடி விற்று விட்டார்கள். அதை லண்டனில் “ஸ்காட்லாண்டு யார்டு” போலீஸார் பிடித்து விட்டார்கள். நம் அரசு லண்டன் உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்தது. நம் அரசின் சார்பில் சாட்சி சொல்ல நான் லண்டன் சென்றேன். அப்போது இந்தியன் ஹைகமிஷனராக டாக்டர் பி.ஸி. அலெக்ஸாண்டர் இருந்தார். நாங்கள் லண்டன் ஹைகமிஷனுக்குச் சென்றவுடன் இரண்டாவது செயலர் அசோக் மேத்தா வரவேற்றார். அப்போது அங்கு வந்திருந்த ஆல்பர்ட் நாக்ஸ் என்ற ஆங்கிலேயரை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். லண்டனில் உள்ள மிகப்பெரிய கண்காட்சி சாலை பிரிட்டிஷ் மியூசியம் என்பது. அதில் பல நாட்டுக் கலைப் பொருள்கள் உள்ளன. இந்திய நாட்டுக் கலைப் பிரிவுக்கு அவர் தலைவர். நான் உங்களைப் பற்றி நன்கு அறிவேன். உங்கள் நூல்களையும் கட்டுரைகளையும் படித்திருக்கிறேன். நீங்கள் வந்ததில் மகிழ்வடைகிறேன் என்று கூறி என்னை வரவேற்றார் டாக்டர் நாக்ஸ். நாக்ஸ் ஒரு “பர்பெக்ட் இங்கிலீஷ் ஜென்டில்மேன்” இந்தியா இந்த நடராஜர் வழக்கில் வெல்ல வேண்டும். அதற்காக எந்த உதவியாக இருந்தாலும் நாங்கள் செய்யத் தயார் என்று இரவும் பகலும் நம்முடன் உழைத்தவர் அவர். 45 நாட்கள் காலை முதல் மாலை வரை உயர் நீதிமன்றத்தில் நம்முடன் இருந்து உதவி செய்தவர் அவர். இந்த வழக்கில் இந்தியா வென்று விட்டால் இனி இந்தியாவிலிருந்து திருடிவரும் கலைப் பொருள்களை யாரும் வெளிநாட்டில் வாங்க மாட்டார்கள். கலைத்திருட்டு ஒழியும் என்பது அவர் கருத்து. இந்த வழக்கில் மிகவும் முக்கிய சாட்சியமாக நான் இருந்தேன். இறுதியில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி தமது தீர்ப்பில் ஒவ்வொரு கட்டத்திலும் எனது சாட்சியத்தை மேற்கோள் காட்டி தீர்ப்பு வழங்கியுள்ளார். இந்தியாவே வென்றது. லண்டனில் இது தொடர்பாகத் தங்கிய போது விடுமுறைகளில் டாக்டர் நாக்ஸ் என்னை அழைத்துச் சென்று இந்திய கலைச் செல்வங்களை எல்லாம் காண்பித்தார். அண்மைக் காலத்தில் தான் கலைத் திருட்டு உலகெங்கும் மிகப் பெரிய அளவில் நடைபெறுகிறது. நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அப்படியில்லை. ஆங்கிலேயர்கள் நம்மை இருநூறாண்டுகளுக்கு மேல் ஆண்டிருக்கிறார்கள். அவர்கள் நினைத்திருந்தால் நம் நாட்டிலிருந்து எவ்வளவோ சிலைகளைக் கடத்தி சென்றிருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. அழிந்து விடாமல் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் இருந்த சில சிலைகளையும், அவர்களுக்கு பரிசாக கிடைத்த பொருள்களையுமே அவர்கள் வைத்துக் கொண்டுள்ளார்கள். சில ஆங்கிலேயர்கள் ராணுவத்தில் பணிபுரிந்த போது போரில் கிடைத்த சில வெற்றிப் பொருள்களும் உள்ளன. இங்கே தெலுங்கு தேசத்தில் குண்டூருக்கு அருகில் அமராவதி என்ற இடத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஒரு பௌத்த ஸ்தூபம் இருந்தது. அதில் ஒரு வகைப் பளிங்கு கல்லினால் செய்த அருமையான சிற்பங்கள் நூற்றுக்கணக்கில் இருந்தன. இந்தியக் கலை வரலாற்றிலேயே ஏன் உலக்க கலை வரலாற்றிலேயே மிக அழகான வேலைப்பாடு மிக்க சிற்பங்கள் அவை. ஒவ்வொரு சிற்பமும் பலலக்ஷம் பெறும். அந்த ஊரில் இருநூறு ஆண்டுகளுக்கு முன் இருந்தவர்களுக்கு ஒரு யோசனை தோன்றியது. அந்த பளிங்கு கல்லைச் சுட்டால் நல்ல சுண்ணாம்பு கிடைக்கும் என்று நூற்றுக்கணக்கான சிற்பங்களை எடுத்து சுட்டுச் சுண்ணாம்பாக்கியே தீர்த்தார்கள். அப்பொழுது அதைப் பார்த்த ஆங்கிலேயர் ஒருவர் அடடா இவை எல்லாம் கலைச் செல்வங்கள் ஆயிற்றே என்று வருந்தி சுடுவதை தடுத்து அவற்றில் எஞ்சியவற்றை சென்னைக்குக் கொண்டு வந்தார். இவற்றை காப்பாற்ற வேண்டும் என லண்டனுக்கு அனுப்பிவைத்தார். மிகுந்தவற்றை அனுப்ப முயற்சித்தார். ஆனால் மற்றொரு ஆங்கிலேயர் இவை இங்கேயேதான் இருக்க வேண்டும். லண்டனுக்கு கொண்டு போகக் கூடாது என்று தடுத்து விட்டார். அந்த அற்புதமான சிற்பங்களில் 200க்கும் மேற்பட்டவை இன்றும் சென்னை மியூசியத்தில் உள்ளன. போகட்டும் இவை நம் ஊர் கலைதானே நாம் எத்தனை பேர் இவற்றைப் பார்த்திருக்கிறோம். அங்கே கொண்டு போன சிலைகளைக் காட்சியில் வைத்திருந்தார்கள். லண்டன் நகரில் தொழிற்சாலைகளாலும் பிறவற்றாலும் ஆகாயத்தில் புகை படியும் வாய்ப்பு உண்டு. அவை இச்சிற்பங்களில் படிந்தால் அவற்றின் வண்ணம் மாறலாம் மங்கலாம் என்று புதிதாக ஒரு குளிர்பதன அறை கட்டி அதில் வைத்து பாதுகாக்கிறார்கள். நம் ஊரில் எப்படித் தெரியுமா! சென்னையில் உப்புக் காற்று அதிகம் உப்புப் பட்டால் இந்தச் சிற்பம் சுண்ணாம்பாக பொறிந்து போய்விடும். நீங்களே போய்ப் பாருங்களேன். நம் சிற்பங்கள் எப்படி வைத்துள்ளோம் என்று பிரிட்டிஷ் மியூஸியத்தில் அவர்கள் வைத்துள்ள பாங்கைப் பார்த்தேன். ஒவ்வொரு விநாடியும் சீதோஷ்ண நிலையில் ஏற்படும் மாற்றம் என்ன. அது எப்படி பாதிக்கக் கூடும். அதை எப்படி தவிர்க்கலாம் என்று கண்காணித்துக் கொண்டே இருக்கிறார்கள். இரண்டு அமராவதி சிற்பங்களை இங்கே பார்க்கலாம். நல்ல அழகான நாட்டியக் காட்சி. பெண்களே பக்கவாத்தியம் வாசிக்கின்றனர். குழல், யாழ், உடுக்கை, கைத்தாளம் ஆகியவற்றைப் பெண்கள் வாசிக்கிறார்கள். அந்த இசையில் லயித்து ஆடுகிறாள் ஒரு பெண். சுற்றி உள்ளோர் அதைக் கண்டு களிக்கிறார்கள். 2000 ஆண்டுகளுக்கும் முன்னர் நம் நாட்டியம் எப்படி இருந்தது என்பதை அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளான் சிற்பி. மற்றொன்று இந்திரனுடைய சிற்பம். நின்ற நிலையில் நிற்கும் தேவேந்திரனின் கரத்தின் மேல் வஜ்ரப்படை காணப்படுகிறது. தமிழ்நாட்டிலிருந்து சில கற்சிலைகளும் செப்புச் சிலைகளும் ஓவியங்களும் காசுகளும் இங்கு உள்ளன. நாகப்படினத்தில் முற்காலத்தில் ஒரு பௌத்த ஸ்தூபம் இருந்தது. அது மறைந்து போய்விட்டது. அங்கு எண்பது ஆண்டுகளுக்கு முன்பு சுமார் முந்நூறு புத்தர் செப்புச் சிலைகள் கிடைத்தன. அவற்றில் பெரும்பாலனவற்றில் பீடத்தில் பெயர்கள் பொறிக்கபட்டுள்ளன. பெரும்பாலனவை இப்பொழுது சென்னை மீயூசியத்தில் உள்ளன. நம் செப்புத் திருமேனிகளில் சில காட்சியில் உள்ளன. அவற்றிலும் ஒன்றிரண்டுதான் கலையழகு வாய்ந்தவை எனலாம். தாரா நகரில் புகழ் வாய்ந்த போஜ மன்னனால் பிரதிஷ்டை செய்து வணங்கபட்ட சரஸ்வதியின் சிலை இங்கேதான் உள்ளது. பளிங்குக் கல்லினால் ஆன இந்தச் சிலையின் காலடியில் போஜன் எழுதிய கல்வெட்டு உள்ளது. வங்காளத்தை ஆண்ட பாலர்கள் என்ற அரசர்களது கலைக்கு எடுத்துக்காட்டாகச் சில எழிலான சிற்பங்கள் உள்ளன. இவற்றைப் பிரிட்டிஷ் மியூசியம் பெரும் பொருள் கொடுத்து வாங்கியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் ஒரு மரபு நிலவி வருகிறது. பெரும் தனிகர்கள் மியூஸியங்களுக்கு ஏராளமான பணம் கொடுப்பார்கள். அந்தப் பணத்தை இதற்காகச் செலவழிக்க வேண்டும் என்று உயில் எழுதி வைப்பார்கள். அது போல் புரூக்ஸ் ஸீவல் என்பவர் பணம் கொடுத்திருக்கிறார். அவர் விருப்பம் இந்திய நாட்டு கலைப் பொருள்களை வாங்கி மியூஸியத்தில் வைக்க வேண்டும் என்பது. அவருக்கு இந்தியகலை மீது அவ்வளவு ஈடுபாடு. இத்தனைக்கும் அவர் இந்தியா வந்தது கூடக் கிடையாதாம். அவர் இறந்து போய் எழுபது ஆண்டுகள் இருக்கும். பல லட்சம் ரூபாய் பெருமான கலைப் பொருள்கள் அவர் விட்டுச் சென்றுள்ள பணத்திலிருந்து வாங்கி வைத்துள்ளார்கள். அப்படியுள்ள சிலைகள் தான் அந்தப் பாலர் சிலைகள். இப்படி உள்ள சிலைகளை எடுத்துக் காட்டி வந்த நண்பர் ஆல்பர்ட் நாக்ஸ் சம்ஸ்கிருதம், ஹிந்தி ஆகிய இரு மொழிகளிலும் தேர்ந்தவர் கர்நாடக இசையில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். எம்.எஸ்.சுப்புலட்சுமி, நமது குழல் வித்துவான்கள், வீணை வித்துவான்கள் ஆகியோரது பாடல்கள் கொண்ட கிராமபோன் இசைத் தட்டுக்களை வீட்டில் நிறைய வைத்திருக்கிறார். அவர் இதுவரை தமிழ் நாடு வந்ததில்லை. இதே போல் இலண்டனில் விக்டோ ரியா ஆல்பர்ட் மியூசியம் என்று ஒன்றும் உள்ளது. அங்கும் இந்தியக் கலைகள் இடம் பெற்றுள்ளன. அங்கு இந்தியத் துறைக்கு தலைவராக ராபர்ட் ஸ்கெல்டன் என்பவர் இருந்தார். இந்தியாவில் உள்ள ஆங்கிலேயர் காலக் கட்டடங்களைக் காக்க வேண்டும் என ஆலோசனைக் குழு ஒன்றை இந்திய அரசு அழைத்தது. அந்தக் குழுவில் இவர் வல்லுநராக வந்திருந்தார். இந்திய ஓவியக்கலையில் குறிப்பாக மொகலாயர் ஓவியங்களில் இவர் தலைசிறந்த வல்லுநர். இந்தியப் பிரிவில் தங்க நகைகள் எல்லாம் வைத்திருந்த பாதுகாப்பு அறைகளைத் திறந்து எனக்குக் காண்பித்தார். இந்த மியூஸியத்தில் பல வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பொருள்கள் உள்ளன. “திப்புவின் புலி” இங்கேதான் உள்ளது. பெரிய புலி பொம்மை உலோகத்தால் செய்யப்பட்டது. அதன் காலடியில் ஆங்கில வீரன் ஒருவன் கிடக்கிறான். அந்தப் புலியின் வயிற்றில் இசைக்கருவி ஒன்று உள்ளது. அதற்கு கீ கொடுத்தால் அந்தப்புலி பாய்ந்து ஆங்கில வீரனைக் காலில் போட்டுக் குதறுவது போல் அசையும். அப்பொழுது ஒரு பயங்கர சத்தத்தை அது வெளியிடும். திப்பு சுல்தான் தம் அவையில் இந்தப் பொம்மையை இயக்கி இப்படித்தான் ஆங்கிலேயர் என் காலில் விழுந்து சாவார்கள் என்று சொல்லிச் சிரிப்பாராம். திப்புவை ஆங்கிலேயர் இறுதியில் வென்ற போது இதை எடுத்துச் சென்றார்கள். இங்கு நம்நாட்டு ஓவியங்களும், 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட வண்ணப் பட்டுநூல் துணிகளும் உள்ளன. இந்திய நாட்டில் நெய்யப்பட்ட துணிகள் எவ்வளவு கலை நுணுக்கம் வாய்ந்தவை என்று பார்க்க வேண்டுமானால் நம் நாட்டில் ஒன்றிரண்டு கூடப் பார்ப்பது கடினம். இற்றுப்போய் பூச்சி அரித்து அல்லது கறையான் தின்றிருக்கும். ஆனால் அங்கு உலகக்கலைகளில் ஒன்றாக அதை வைத்திருக்கிறார்கள். மிகவும் பாதுகாப்பாக பத்திரமாக வைத்திருக்கிறார்கள். தஞ்சாவூரில் எழுதப்பட்ட பல ஓவியங்களைப் பார்த்தேன். ஓர் ஓவியம் காகிதத்தில் எழுதப்பட்டுள்ளது. சுமார் இருபது அடி நீளமுள்ள ஒரு சுருள். அதில் தஞ்சாவூர் பிருஹதீசுவரருக்குப் பெருந்திருவிழா நடைபெறுகிறது. சுவாமி அம்பாள் என்று பஞ்சமூர்த்திகளும் ஊர்வலமாக வருகிறார்கள். இதற்கு முன் மராட்டிய அரசர் சரபோஜி யானை மீது சவாரியாகச் செல்கிறார். அவர் பின்னால் ஆங்கிலேய ரெஸிடெண்ட் குதிரை மீது செல்கிறார். ஏராளமான ஜனங்கள் இருபுறமும் நின்று இந்த விழாவைப் பார்க்கிறார்கள். அன்றைய நாட்டியக் கலைஞர்கள் ஆங்காங்கே நாட்டியம் ஆடுகிறார்கள் மிகவும் அற்புதமான ஓவியம். இந்த ஓவியத்தைப் பார்த்தால் அசந்து போய்விடுவீர்கள்! அவ்வளவு அழகு. நாகப்பட்டினத்தில் கிடைத்த சோழர்காலப் புத்தர் செப்புத்திருமேனி ஒன்று உள்ளது. மிகவும் பெரிய இந்த புத்தர் சிலை தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. இப்படி இங்குள்ளவற்றை எல்லாம் எழுத ஒரு புத்தகமே தேவைப்படும். ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் சொல்ல வேண்டும். இதைப்படிக்கும் போது "அடாடா நம் கலை எல்லாம் போய் விட்டனவே?" என்று எண்ணி வருந்தத் தோன்றும். அது ஓர் அளவு உண்மையாகக் கூடத் தோன்றும். ஆனால் வேறுவொறு கோணத்திலிருந்து இதைப் பார்க்கவேண்டும். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த மியூசியங்களைப் பார்க்க வருகிறார்கள். ஓரே இடத்தில் உலகில் உள்ள எல்லாக் கலைகளையும் காண்கின்றார்கள். இவற்றில் நமது எல்லாக் கலைகளையும் காண்கிறார்கள். இவற்றில் நமது கலைச் செல்வங்கள் இடம் பெறுவதால் உலகக் கலைச் செல்வங்களில் ஒன்றாக நம்மவற்றை அவரகள் காண முடிகிறது. கிரேக்கம், எகிப்து, ரோமானியக் கலைகளோடு சரிநிகர் சமானமாக நம்முடைய கலையை எடுத்துக் காட்டும் நிறுவனம் இவை. இந்திய நாட்டின் வரலாற்றை பண்பாட்டை கலையை உலக மக்களுக்கு எடுத்துக் காட்டும் கண்ணாடியாக இந்திய நல்லெண்ண தூதுவர்களாக இவை மிளிர்கின்றன. இவை செய்யும் பணி மகத்தான பணி.
அத்தியாயம் 40 | Contents | அத்தியாயம் 42 | Home