சுமார் நாற்பது வருடத்திற்கு முன்னால் ஒரு பெரியவர் சிந்து நதிக் கரையோரமாக நடந்துகொண்டிருந்தார். அங்கே ஏதோ ஒரு பொருள் கிடைத்தது. கையில் எடுத்துப் பார்த்தார். அது சாதுரனமான ஒரு முத்திரை. அதில் அழகான மிருகம் ஒன்றும், பொம்மை பொம்மையான எழுத்துகளுமிருந்தன. அந்த எழுத்தை வாசிக்க முடியவில்லை. அந்த முத்திரையைப் பார்த்து ரொம்ப ஆச்சரியப்பட்டார். அந்த முத்திரை கிடைத்த இடம் மேடாக இருந்தது. அதைக் குறித்துக் கொண்டார். அது கிடைத்த ஊருக்கு ஹரப்பா என்று பெயர். ஒரு வருஷம் கழித்து சில புதைபொருள் ஆராய்ச்சியாளர்களோடு அங்கு வந்தார். அந்த மேட்டை மெதுவாகத் தோண்டி பார்த்தார். அங்கு பூமிக்கடியில் பல வீடுகளும், மக்கள் உபயோகித்த மண்பாண்டங்களும் கிடைத்தன.
அதேபோல சிந்து நதிகரையிலே உள்ள இன்னும் ஒரு ஊர், அதற்கு மொஹஞ்சதாரோ என்று பெயர். அந்த ஊரிலும் தோண்டி பார்த்தார். அங்கேயும் ஹரப்பா மாதிரியே பூமிக்கடியில் வீடுகள் எல்லாம் காணப்பட்டன. இதேபோல் சிந்து நதிகரையில் பல ஊர்களிலும் கிடைத்தன. அதிலிருந்து அந்த இடங்களில் எல்லாம் சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்திருக்க வேண்டும் என்று தெரிய வந்தது.
சிந்து நதிப் பண்பாட்டுப் பொம்மை - 1
சிந்து நதிகரையில் வாழ்ந்தவர்கள் சிறந்த பண்பாடுடையவர்களாய் வாழந்தார்கள். அவர்களது பண்பாட்டைச் "சிந்து நதிப் பண்பாடு" என்று சரித்ததிர ஆசிரியர்கள் சொல்வார்கள். புதைபொருள் ஆராய்ச்சியாளர்களிடம் ஒரு வழக்கம் உண்டு. முதன்முதலில் எந்த ஊரில், ஒரு புது நாகரிகத்தை கண்டுபிடிக்கிறார்களோ, அதற்கு அந்த ஊர்ப் பெயரையே வைப்பார்கள். இங்கு முதன்முதலில் ஒரு முத்திரை கிடைத்தது என்று பார்த்தோமல்லவா? அதனால் இதை "ஹாரப்பா பண்பாடு" என்று சொல்லுவார்கள்.
இந்தியாவிலேயே மிகப் பழமையன மக்கள் இந்த சிந்து நதிப் பண்பாட்டு மக்கள்தான். இதற்கு முன்பே நம் நாட்டில் பழைய கற்கால மனிதர்களும், புதிய கற்கால மனிதர்களும் வாழ்ந்தார்கள். கற்கால மக்களுடைய சரித்திரம் நமக்குத் தெரியாது. ஆனால் சிந்து நதி மக்கள் எவ்விதம் வாழ்ந்தார்கள். அவர்களுடைய குழந்தைகள் என்ன என்ன பொம்மைகளை வைத்துக்கொண்டு விளையாடினார்கள் என்று நமக்குத் தெரியும். குரங்கு பொம்மை, நாய் பொம்மை, காண்டமிருகம் பொம்மை போன்ற பல பொம்மைகள் அங்கு கிடைத்துள்ளன. அவைகளைப் பற்றிச் சொல்வதற்கு முன்னால் அங்கு வாழ்ந்த மக்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.
மொஹஞ்சதாரோ, ஹாரப்பா என்ற இடங்களில் பல வீடுகள் கொண்ட நகரங்களே இருக்கின்றன. இப்பொழுது புதிது புதிதாக வீடுகள் கட்டுகிறார்களே, அங்கு போய்ப் பார்த்திருக்கிறீர்களே? அங்கு தெருக்கள் எல்லாம் நேராயிருக்கும். வீடுகள் எல்லாம் ஒரே சீராக இருக்கும். நல்ல திட்டமிட்டுக் கட்டப்பட்டு வரிசையாக இருக்கும். ஆனால் பழைய வீடுகள் இருக்கின்ற தெருக்களைப் பாருங்கள். இவைகள் வளைந்து வளைந்து இருக்கும். நேராக இருக்காது. ஹாரப்பா பண்பாட்டு நகரங்களில் தெருக்கள் பூராகவும் நேராகவும், சீராகவும் இருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் குளிக்க தனியறை இருக்கிறது. சாப்பிடுவதற்குத் தனயறை இருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் சாக்கடைகளும் உண்டு. ஒவ்வொரு தெருவிலும் வீடுகளிலிருந்து வெளிவரும் கழிவுநீரை எடுத்துச் செல்ல பெரிய சாக்கடைகள் இருந்தன. ஆனால் அவைகள் மேலே தெரியாமல் மூடப்பட்டிருக்கும். இதனால் புழு, பூச்சிகள் வரமாட்டா.
சிந்து நதிப் பண்பாட்டுப் பொம்மை - 2
இதிலிருந்து இங்கு வாழந்த மக்கள் சுகாதாரம் தெரிந்தவர்கள்; ஆரோக்கியமான வாழ்க்கை நடத்தினார்கள் என்றும் தெரிகிறதல்லவா? நன்றாக திட்டமிட்டு வீடுகள் கட்டுவதில் சிறந்தவர்கள் என்றும் தெரிகிறதல்லவா?
இவ்வளவு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்திய மக்கள் சிறந்த பண்பாடு உடையவர்களாக வாழ்ந்தார்கள் என்று உலகமே ஆச்சரியபடுகின்றது. நம் முன்னோர்கள் இவ்வளவு சிறந்தவர்கள் என்று தெரிந்து கொள்ள நமக்கு பெருமையாக இருக்கிறது அல்லவா?
இவ்வளவு அழகாகவும் திட்டமிட்டும் கட்டிய நகரங்களை எதிரிகள் அழித்துவிடாமல் இருக்க, நகரத்தைச் சுற்றிலும் உயர்ந்த கோட்டை மதில்களை எழுப்பியிருக்கிறார்கள். இவர்கள் வீடுகட்ட உபயோகித்த செங்கற்கள் எல்லாம் மிகப் பெரியவை. குளிக்கவும், நீச்சலடிக்கவும் குளங்கள்கூட இவர்கள் கட்டியிருக்கிறார்கள.
உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? உலகத்திலேயே முதன்முதலில் தசம முறையைக் கண்டுபிடித்தது நம் இந்திய நாடுதான். தசம முறை என்றால் என்ன தெரியுமல்லவா? எல்லாம் பத்தின் பாகம் என்று அர்த்தம். ஒரு ரூபாய்க்கு நூறு பைசா; அரை ரூபாய்க்கு ஐம்பது பைசா; கால் ரூபாய்க்கு இருபத்தைந்து பைசா — இந்த கணக்கு அணா கணக்கைவிடப் போடுவதற்கு ரொம்ப சுலபமல்லவா? இதேபோல எடைகளிலும் நீளம், உயரம் போன்ற நீட்டலவைகளிலும், தசாம்ச முறை மிகவும் சுலபமானது. இந்த முறையை நம்நாட்டில் சிந்து பண்பாட்டு மக்கள் உபயோகித்து வந்தார்கள். அங்கு பல எடைகள் கிடைத்துள்ளன. அவற்றில் பொதுவாக இரண்டு வகைகள் உள்ளன. ஒருவகை, பத்தின் மடங்கான தசாம்ச வகை; மற்றது 1, 2, 4,8 என்ற இரண்டு மடங்குகளாலான முறை. தசாம்ச முறை மிகவும் பழமையானது, சுலபமானது என்ற காரணத்தினால்தான் நம் இந்திய அரசாங்கம் நாணயங்கள், நீட்டலளவை, நிறுத்தல் அளவை, முகத்தல் அளவை முதலிய எல்லாவற்றையும் இப்போது தசாம்ச முறைக்கு மாற்றிவிட்டார்கள்.
இனி சிந்துநதிக் குழந்தைகள் என்ன பொம்மைகளை உபோகித்தார்கள் என்று தெரிந்துகொள்வோம். கல், களிமண், பீங்கான் முதலியவற்றாலான பொம்மைகளை இவர்கள் உபயோகித்தார்கள். இந்த பொம்மைகள் எல்லாம் இப்போது கடைத்திருக்கின்றன. மனிதரைப் போன்ற சிறிய பொம்மைகள் ஒருவகைப் பளிங்குக் கல்லினால் செய்யப்பட்டிருக்கின்றன. பூமிக்கடியிலிருந்து கிடைத்திருப்பதினால் இவைகள் உடைந்து போயிருக்கின்றன. இருந்தாலும், இவை மிகவும் அழகாக உள்ளன. இவ்வளவு அழகான இந்தப் பொம்மைகளைச் சிறந்த வேலைப்படுடையவர்கள்தான் செய்திருக்க முடியும். பச்சை களிமண்ணினால் பொம்மைகளைச் செய்து அதை உலர்த்திவிடவேண்டும் பிறகு நெருப்பில் போட்டுச் சுட்டால் அவை சீக்கிரம் உடையாமல் கெட்டியாய் இருக்கும். இப்போது நவராத்திரிக்கு நாம் வாங்கும் மண் பொம்மைகள் எல்லாம் அப்படிதான் செய்யப்பட்டவை. அதேபோல செய்யபட்ட பல பொம்மைகள் சிந்து நதி நகரங்களில் கிடைத்தன. அவற்றில் அப்பம் விற்கும் பெண், குழந்தைக்கு பால் ஊட்டும் தாயார், தொப்பி போட்ட ஆள் — இவர்களின் பொம்மைகள் இருக்கின்றன. இதேபோல களிமண்ணால் செய்த ஊதல்கள் கூடக் கிடைத்திருக்கின்றன. இந்த ஊதல்கள் குருவிபோலப் பறைவை பொம்மையாக இருக்கின்றன. அதன் வால் பக்கத்தில் துளைப்போட்டு ஊதுவதற்கு வழிசெய்து இருக்கிறது. சிறிய மாட்டு வண்டிகளின் பொம்மைகளும் அதில் பூட்டிய மாட்டின் பொம்மைகளும்கூட அதிகமாக கிடைத்தன. ஆனால் அதன் சக்கரங்களில் இப்போது இருக்கிற மாதிரி குறுக்குச் சட்டங்கள் கிடையாது; சக்கரம் பூராவும் ஒரே பாகத்தால் செய்த மாதரியிருக்கிறது.
சிந்துநதி மக்கள் மண் பொம்மைகளைப் போலவே உலோகத்தாலும் பொம்மைகள் செய்தார்கள். உலோகங்களில் தாமிரம் அதிகமாக உபயோகப் படுத்தபட்டது. குழந்தைகளுக்கு மிருகங்களுடைய பொம்மைகள் என்றால் எப்பவுமே ரொம்ப பிடிக்கும். இப்போதுகூட நாய், குரங்கு, சிங்கம் போன்ற பொம்மைகள் உங்களுக்கு ரொம்ப பிடிக்குமல்லவா? அதேபோல சிந்துநதிக் கரையில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வாழ்ந்திருந்த குழந்தைகளுக்கும் மிருகங்களின் பொம்மைகள்தான் ரொம்ப பிடிக்கும். அதனால்தான் அவர்களுடைய பொம்மைகளில் செம்மறியாட்டுப் பொம்மையும், ஒரு எருமை "ஹொய்ங்" என்று கட்திக்கொண்டு தலையை ஆட்டுவதுபோலப் பொம்மைகளும் கிடைத்திருக்கின்றன. ஒரு நாட்டியமாடும் பெண்ணின் அழகான சின்ன பொம்மையும் கிடைத்திருக்கிறது. இவைகள் உலகத்திலேயே மிகவும் அழகுள்ள பொம்மைகள். இவைகளை பார்ப்பதற்கு அமெரிக்கா, இங்லாந்து, பிரான்சு, ஜெர்மனி, ஜப்பான் போன்ற வெளிநாடுகளிலிருந்தெல்லாம் மக்கள் இன்னும் வந்து பார்த்து மிகவும் ஆச்சரியபடுகிறார்கள். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இவ்வளவு அழகான பொம்மைகளைச் செய்து இருக்கிறார்களே என்பதின் இவர்கள் ஆச்சரியபடுவதற்கான காரணம்.
இந்தச் சிந்துநதிப் பண்பாட்டில் மற்றொரு முக்கிய விஷயம் உண்டு. முதன் முதலில் இங்கு முத்திரையொன்று ஹாரப்பாவில் கிடைத்தது என்று பார்த்தோம் அல்லவா? அதேபோல ஆயிரத்திற்கும் மேற்பட்ட முத்திரைகள் இதுவரையிலும் கிடைத்திருக்கின்றன. இவைகள் சிறிய சதுர வடிவத்திலும், நீண்ட சதுரவடிவத்திலும் உள்ளன. ஒரு பக்கத்தில் சின்ன மிருகங்களும், பொம்மை வடிவமான எழுத்துக்களும் இருக்கின்றன. இந்த எழுத்துக்கள் என்ன சொல்கின்றன என்று இதுவரையிலும் யாராலும் சொல்ல முடியவில்லை. ஆனால் இதிலிருக்கும் பொம்மை, மிருகங்கள் எல்லாம் ரொம்ப அழகாக உள்ளன. சிறியதாயுள்ள மிருகங்களதான் சிந்துநதி முத்திரையில் இருக்கின்றன. ஆயினும் அவை மிகவும் அழகு வாய்ந்தவை. இவற்றில் காண்டா மிருகம், யானை, புலி, மாடு முதலியவை காணப்படுகின்றன. ஆனாலும் அதிகமான முத்திரைகளில் ஒரு அதிசய மிருகம் காணப்படுகிறது. அதற்கு ஒரே ஒரு கொம்பு தலையில் இருக்கும். காலைப் பார்த்தால் மாடு மாதிரி இருக்கும். இது என்ன மிருகம் என்று தெரியவில்லை. இதை "ஒத்தைக் கொம்பு மிருகம்" என்று சொல்கிறார்கள். இதேபோல இன்னும் சில அதிசய மிருகங்களெல்லாம்கூட உள்ளன. இதுபோல இன்னும் பல விஷயங்களைச் சிந்துநதிப் பண்பாட்டு மக்களிடமிருந்து அறிந்து கொள்லாம்.