◀ Prev📑 ContentsNext ▶📖 3D Flipbook
இரா. நாகசாமி பொம்மை பழைய பொம்மை ரோமானியப் பண்பாட்டில்
கிரேக்கப் பண்பாட்டில் | சிந்து நதிப் பண்பாட்டில் | பொருளடக்கம் | அகெடமி

ரோமுலஸ், ரேமஸ் என்பவர்கள் மார்ஸ் என்ற கடவுளுடைய இரட்டைக் குழந்தைகள். பிறந்தவுடன் அவர்களை ஒரு கூடையில் வைத்து டைபர் என்ற நதியில் விட்டுவிட்டார்கள். அந்த கூடை ஓடி ஒரு கரையை அடைந்தது. அந்தக் குழந்தைகளை ஒர் ஓநாய் எடுத்து பால் கொடுத்து வளர்த்தது. அவர்கள் பெரியவர்களானவுடன் ஒரு புது நகரத்தை ஏற்படுத்த விரும்பினார்கள். அவர்களில் ரோமுலஸ் ஏற்படுத்திய நகரத்திற்கு ரோம் என்று பெயர். இங்கு வாழ்ந்த ஜனங்களுக்கு ரோமானியர் என்று பெயர். ரோம் நகரம் இத்தாலிய நாட்டின் ஒரு பகுதியில் உள்ளது. கிறிஸ்து பிறப்பதாற்கு ஓராயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரே இங்கு மக்கள் வாழ்ந்து வந்தனர். ஆனால் கிறிஸ்து பிறந்த காலத்தில்தான் இன்றைக்கு சுமார் 2000 வருடங்களுக்கு முன்னர் ரோமானியர் மிகச் சிறந்தவர்களாக வாழ்ந்துவந்தனர். அந்த ரோமானிய நாட்டில் என்ன பொம்மைகள் இருந்தன என்பதைப்பற்றிப் பார்ப்போம்.
ரோமானியப் பண்பாட்டில் பொம்மை
ரோமானியப் பண்பாட்டில் பொம்மை
அவர்களுடைய பொம்மைகளைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன் அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா? ரோமுலஸ் சுமார் 2700 ஆண்டுகளுக்கு முன்னால் ரோமானிய நாட்டை ஏற்படுத்தினார். கொஞ்ச காலம் ரோம் நாட்டை அரசர்கள் ஆண்டார்கள். அதன்பின் ரோமானியர் நாட்டில் முடியரசு கிடையாது. அதாவது அவர்களை அரசர்கள் ஆளவில்லை. இப்போது நம் நாட்டில் குடியரசு இருப்பதுபோல், அங்கு அப்போதே குடியரசு இருந்தது. மக்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்கள் மூலம் ஆட்சியை நடத்தினர். ஜூலியஸ் சீசர் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள் அல்லவா? அவரும் அகஸடஸ் என்பவரும் இவ்விதம் ஆண்ட தலைவர்களில் முக்கியமானவர்கள். இதற்குப்பிறகு ரோமானியர் நாடு ஒரு பேரரசாக மாறியது. அப்போது அதை பேரரசர்கள் ஆண்டார்கள்.
ரோமானிய மரத் தேர்ப் பொம்மை
ரோமானிய மரத் தேர்ப் பொம்மை
ரோமானியர்கள் சிறந்த வீரர்கள். சிறந்த கட்டுபாடான படைகளை உடையவர்கள். படைத்தலைவனுடைய சொல்லைத் துளியும் தட்டாதவர்கள். உலகத்திலேயே பெரிய சாம்ராஜ்யமாக ரோமானிய நாடு விளங்கியது. தங்கள் மக்களுக்கு வீரத்தை விளைவிக்க இவர்கள் விசித்திரமான விளையாட்டு ஒன்று ஆடினார்கள். வட்டமான ஒரு விளையாட்டு மைதானம். அதில் மக்கள் பார்ப்பதற்கு நிரம்ப இடங்கள் இருக்கும். அதன் மத்தியில் விளையாட்டு இடம். இடற்கடியில் பல அறைகள் இருக்கும். குகை மாதிரி இருக்கும். அந்த அறைகளில் சிங்கம், புலி, கரடி, ஓநாய் முதலிய காட்டு மிருகங்கள் இருக்கும்.
ரோமானியப் பொம்மை
ரோமானியப் பொம்மை
விளையாடுகிற இடத்தில் விளையாட்டு வீரர்கள் இருப்பார்கள். அவர்கள் மேல் இந்த மிருகங்களை அவிழ்த்து விடுவார்கள். அப்போது அவ்வீரர்கள் அந்த மிருகங்களுடன் சண்டை போடுவார்கள். சில சமயம் மிருகங்களை அவர்கள் கொன்று விடுவார்கள். சில சமயம் மிருகங்கள் அவர்களை கொன்றுவிடும். எவ்வளவு கொடுமையான விளையாட்டு இதை மக்கள் வேடிக்கை பார்த்து சிரிப்பார்களாம். இது மக்கள் மனத்தில் வீர உணர்ச்சியை உண்டாக்குமாம். ரோமானியப் படைகள் எங்கெல்லாம் தங்கியதோ அங்கெல்லாம் இந்த மைதானத்தை ஏற்படுத்தினார்கள். எல்லா மைதானாத்திலும் மிகவும் பெரியது ரோம் நகரில் இருக்கிறது. அடே அப்பா ! எவ்வளவு பிரும்மாண்டமான மைதானம் தெரியுமா? அது கட்டி முடிந்து சுமார் 2000 வருஷமாகிறது. இன்னும் அது நிற்கிறது. அதைப் பார்த்தால் மிகவும் ஆச்சரியமாக இருக்கும்.
ரோமானியத் தந்தப் பொம்மை
ரோமானியத் தந்தப் பொம்மை
ஆனால் இது மிகவும் கொடுமையான விளையாட்டு. மனிதர்களும் மிருகங்களும் ஒருவரையொருவர் கொல்லுவது; மக்கள் அதை வேடிக்கப் பார்ப்பது மிகவும் தவறு என்று ஒரு முனிவர் அந்த விளையாட்டு நடந்துகொண்டிருந்த மைதானத்துக்கு போனார். "இது தப்பு இப்படி விளையாடாதீர்கள்" என்று கூறினார். விளையாட்டை இவர் கெடுக்கிறார் என்று இவரைக் கல்லாலேயே அடித்து எல்லோரும் கொன்று விட்டார்கள். அவர் இறந்துபோய்விட்டார். ஆனாலும் அன்றிலிருந்து இந்த விளையாட்டே நின்றுவிட்டது.
ரோமானிய விளையாட்டுப் பொம்மை
ரோமானிய விளையாட்டுப் பொம்மை
ரோமானியர்கள் "மித்திரன்" என்ற கடவுளை வணங்கினார்கள். அவருக்குக் கோயில் எழுப்பினார்கள். நம் நாட்டிலும் "மித்திரன்" என்ற கடவுளை வணங்குகிறோம். மித்திரன் என்பது சூரியன். என்ன ஒற்றுமை பார்த்தீர்களா? ரோமானியர்கள் ஒருவகை மண் பாண்டங்களைச் செய்வதிலும் கெட்டிக்காரர்கள். அந்த மண் பானைகள் செய்யத் தனி அச்சு வைத்திருப்பார்கள். அதில் களிமண்ணை வைத்து பானைகள் செய்வார்கள். அந்தப் பானைகளின் வெளிப்புறமெல்லாம் அழகு அழகான பொம்மைகள் அந்த அச்சிலிருந்து விழுந்திருக்கும். அந்த மண்பாண்டங்கள் எல்லாம் செக்கச் செவேலென்று இருக்கும். பளபளவென்று கண்ணாடி போல இருக்கும். அந்த மண்பாண்டகளை உலகத்தில் பல தேசங்கள் விரும்பின. பல நாடுகளுக்கு அந்த மண்பாண்டங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. ரோம் நகரில்தான் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் மதகுருவான போப்பாண்டவர் இருக்கிறார். இவருடைய இடத்தில் செயினட் பீட்டர்ஸ் சர்ச் ஒன்று இருக்கிறது. அதில் உலகப் பிரசித்த வாய்ந்த ஓவியங்கள் இருக்கின்றன. "மைக்கேல் ஆன்செலோ", "ரபேல்" என்ற புகழ்வாய்ந்த ஓவியர்கள் சித்திரம் வரைந்திருக்கிறார்கள். ஏசு கிறஸ்துவின் சரித்திரத்தை இவை விளக்குகின்றன. மிகவும் அழகான ஓவியங்கள். ரோமானரியர் நாட்டில் களிமண்ணில் ஆன பொம்மைகள் கிடைக்கின்றன. களி மண்ணால் பொம்மைகள் செய்வதில் ரோமானியர் மிகச் சிறந்தவர்கள். இவர்கள் பொம்மைகளுக்குகென்று விழா ஒன்று வருடா வருடம் கொண்டாடுவார்கள். நாம் நவராத்திரி விழா கொண்டாடுகிறோம் அல்லவா? அது போல, ஒருவருக்கொருவர் இவ்விழாவில் பொம்மைகளைப் பரிசாக அளித்துக் கொள்வார்கள். இவ்விழாவில் அதிகமாக பொம்மைகளை வாங்கி சிறு குழந்தைகளுக்கு விளையாடக் கொடுப்பார்கள். சிறுவர்கள் தங்கள் ஆசிரியர்களுக்கு பொம்மைகளை வணக்கத்துடன் அளிப்பார்கள். நம் சிறுவர்கள் அட்டையில் சிங்கம், புலி, பூதம் எல்லாம் எழுதி முகமூடியாக அணிந்துகொண்டு விளையாடுகிறார்கள் அல்லவா? அதேபோல ரோமானியர் நாட்டில் களிமண்ணால் செய்த முகமூடிகள் இருந்தன.
ரோமானியக் குதிரைப் பொம்மை
ரோமானியக் குதிரைப் பொம்மை
சர்க்கஸ் அல்லது நாடகம் பார்க்கப்போனால் நாம் டிக்கட் வாங்குகிறோமல்லவா? அதேபோல ரோமானியர் நாட்டிலும் சர்க்கஸ் பார்க்கப் போனால் டிக்கட் உண்டு. ஆனால் அந்த டிக்கட், களிமண்ணால் செய்யப்பட்டது. யானை சர்க்கஸ் பார்க்கப் போனால் யானை பொம்மை டிக்கட்டில் செய்யப்பட்டிருக்கும். குதிரைச் சர்க்கஸில் குதிரைப் பொம்மையிருக்கும். மண்ணாலான உண்டியலை நாம் பார்த்திருக்கிறோம். அதுபோல் கூடாராம் போன்ற உண்டியல்களை ரோமானியச் சிறுவர்கள் வைத்திருந்தனர். அவர்களுடைய விளக்குகளில் பல பொம்மைகள் இருந்தன. ரோமானியர்கள் ரொம்ப நாட்களுக்குச் சுடாத செங்கல்களைக் கொண்டு வீடு கட்டி வசித்தனர். பின்னர்தான் சுட்ட கற்களைக் கொண்டு வீடு கட்டினர். இந்த சுட்ட செங்கல்களிலும், ஓடுகளிலும் பலவிதமான பொம்மைகளை அவர்கள் பொறித்தனர். ரோமானியர் வாழ்ந்த காலத்துக்கு சுமார் 800 வருஷத்துக்கு முன்னால், பக்கத்து நாடாகிய கிரேக்க நாட்டில் வாழ்ந்தவர்கள் மிகவும் சமர்தர்கள். நாட்டை ஆள்வதிலும் பொம்மைகளைச் செய்வதிலும் சிறந்தவர்கள் என்று பார்த்தோம் அல்லவா? கிரேகர்களின் பொம்மைகள் பளிங்குக் கல்லினால் செய்யப்பட்டிருந்தன. மற்ற கற்களாலும் செய்யப்பட்டிருந்தன. வெண்கலத்தாலும் நிரம்ப பொம்மைகள் செய்தார்கள். மண்ணாலும் பொம்மைகள் செய்தார்கள் என்று பார்த்தோமல்லவா? இவைகள் எல்லாம் ரொம்ப ரொம்ப அழகாக இருக்கும். அதனால் ரோமானியர்கள் கிரேக்கர்களின் பொம்மைகளை பார்த்து அதேபோலத் தங்கள் பொம்மைகளயும் செய்தார்கள். கிரேக்க நாடு கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்து போய்விட்டது. ரோமானியர்கள் மிகவும் பலம் பொருந்தியவர்கள். அதனால் கிரேக்க நாட்டிலிருந்து நல்ல நல்ல பொம்மைகளைத் தங்கள் நாட்டுக்குக் கொண்டு வந்துவிடுவார்கள். அவர்களது பொம்மைகளைப் பார்த்துக் "காப்பி" அடித்துவிடுவார்கள். மேலும் இந்த பொம்மையை யார் செய்தது, எதைப் பார்த்து செய்தது என்றெல்லாம் எழுதிவிடுவார்கள். இவ்விதம் செய்த பளிங்கு பொம்மைகலும் வெண்கலப் பொம்மைகளும் ஏராளமாக இருக்கின்றன. பெரிய பெரிய பொம்மைகளைக் கூட ரோமானியர்கள் களிமண்ணால் செய்தனர். அவர்களது பெட்டிகள்கூடக் களிமண்ணால் செய்யப்பட்டிருக்கும். நம் நாட்டில் இறந்தவர்களுடைய எலும்புகளை எடுத்து ஓர் பானையில் போட்டு அடக்கம் செய்வது பழையகால வழக்கங்களில் ஒன்று. அப்பானைகளுக்கு "முதுமக்கள் தாழி" என்று பெயர். அதுபோல் ரோமானியர் நாட்டிலும் பழக்கம் இருந்தது. ஆனால் அவர்கள் பானைகளுக்கு பதிலாக மண்ணாலான பெட்டிகளையும், பளிங்குக் கல்லாலான பெட்டிகளையும் உபயோகபடுத்தினர். அப்பெட்டிகளின் மேல் இறந்தவர்களின் பொம்மைகளைச் செய்துவைப்பார்கள். அந்த நாட்டில் உதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் தோண்டிப் பல பொம்மைகளை எடுத்திருக்கிறார்கள். ரோமலஸ் என்ற இரட்டைக் குழந்தைகளுக்கு ஓநாய் பால் கொடுப்பதுபோல் உள்ள பொம்மை ரொம்ப அழகாக இருகிறது. நம் நாட்டில் நதியை நாம் அன்னை என்று வணங்குகிறோம். கங்கை, கோதாவரி, கிருஷ்ணா, காவேரி எல்லாவற்றையும் அன்னை என்கிறோம். ஆனால் ரோமானியர்கள் நதிகளை தந்தை என்று வணங்குகிறார்கள். டைபர் நதியின் பொம்மை மிகவும் இருக்கும். அவரை பெரிய தந்தைபோல் செய்வார்கள். அவர் பக்கத்தில் ஓநாயும் இரண்டு குழந்தைகளும் இருக்கும். இந்த ரோமானியரைப்பற்றி மற்ற ஒரு முக்கிய விஷயம் உண்டு. அவர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நாகரீகத்தில் சிறந்து வாழ்நதார்கள் என்று சொன்னேன் அல்லவா? அப்போதே அவர்கள் நம் தமிழ் நாட்டுக்கு வந்தார்கள். எப்படி வந்தார்கள் தெரியுமா? கப்பலேறிக் கடல் கடந்து வந்தார்கள். அவர்களைப்பற்றி நம் சங்ககால இலக்கியங்கள் கூறுகின்றன. அப்படி வந்தபோது அவர்கள் தமது நாட்டு நாணயங்களையும் இங்கு கொண்டு வந்தார்கள். அந்த நாணயங்கள் சுமார் இராண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய நாணயங்கள். அவை நம் நாட்டில் கிடைத்திருக்கின்றன. இந்த நாணயங்களை எல்லாம் சென்னை பொருட்காட்சிச் சாலைக்கு போனால் இன்றும் பார்கலாம். அவர்களது மண் பாண்டங்கள் கூட நம் நாட்டில் கிடைத்திருக்கின்றன. பாண்டிச்சேரியில் இவை கிடைத்தன. இதிலிருந்து பாண்டிச்சேரியில் ரோமானியர் இருந்தார்கள் என்று தெரிகிறதல்லவா ?
கிரேக்கப் பண்பாட்டில் | சிந்து நதிப் பண்பாட்டில் | பொருளடக்கம் | அகெடமி