சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்க நாட்டை ஒரு வீரன் ஆண்டான். அவனுக்கு உலகம் முழுவதையும் பிடிக்கவேண்டும் என்ற ஆசை. இந்தியா மிகவும் நல்ல நாடு. அதைப் பிடிக்க வேண்டுமென்று படையெடுத்து வந்தான். அவன் பெயர் என்ன தெரியுமா? அவன்தான் அலெக்ஸாண்டர். அலெக்ஸாண்டர் சிந்துநதி வரை வந்தான். அவன் நாட்டை விட்டு வெகு தூரம் வந்த அவனது படைகள் மேலே செல்ல மறுத்துவிட்டன. அதனால் அலெக்ஸாண்டர் தன் தாய்நாடு திரும்பினான். போகும் வழியிலேயே இறந்துவிட்டான். அவன் வந்த வழியான வடமேற்கு இந்தியாப்பகுதியில் அவனுடன் வந்த சில சேனைத் தலைவர்கள் தங்கினார்கள். அவர்களே அந்த பகுதியை ஆண்டனர். அந்த பகுதியை இந்தியாவின் பழைய கால இலக்கியங்கள் "காந்தார தேசம்" என்று சொல்லும். இந்த காந்தார தேசத்தை முதலில் கிரேக்கத் தலைவர்களும், அவர்களக்குப் பின்னர் சகர், குஷானர் என்பவர்களும் ஆண்டு வந்தனர். அதனால் அதை "இந்திய கிரேக்க பண்பாடு" என்று கூறுவர். அதையே "காந்தாரப் பண்பாடு" என்றும் சொல்வதுண்டு. இந்த காந்தாரப் பண்பாட்டில் எவ்விதம் பொம்மைகள் இருந்தன என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
இங்கு தங்கியவர்கள் கிரேக்கர்கள் ஆனபோதிலும் இவர்கள் பௌத்த மதத்தைத் தழுவினார்கள். அதனால் இங்கு பௌத்த ஸ்தூபங்கள் எழுந்தன. இவ்விடத்தை ஆராய்ச்சியாளர் பரிசோதித்தனர். தக்ஷசீலம் என்ற இடத்தில் மிகச் சிறந்த ஒரு பௌத்த ஸ்தூபம் இருந்தது. அங்கு பல பொம்மைகள் கிடைத்துள்ளன. அவைகளின் சில மண்ணாலும், சில கல்லாலும், சில உலோகங்களாலும் ஆனவை. குழந்தைகள் வைத்துக்கொண்டு விளையாடக்கூடிய சில மண் சின்னங்கள் இங்கு கிடைத்துள்ளன. இன்றுகூட திருவிழாக் காலங்களில் மண்ணினால் ஆன சில விளையாட்டுப் பாத்திரங்களை பார்க்கிறோம். எழுதுவதற்கு மைக்கூடுகள் நாம் வைத்துக்கொண்டு இருக்கிறோம். அவைகள் பல உருவங்களில் கண்ணாடியில் செய்யப்பட்டு விளங்குகின்றன. ஆனால் அக்காலத்தில் மண்ணினாலேயே மைக்கூடுகள் செய்து உபயோகப்படுத்தினார்கள். அவை எப்படி இருந்தன தெரியுமா? பறவை உருவிலே இருந்தன. அவைகளைக் களிமண்ணால் செய்து பின்னர் நெருப்பில் இட்டுச் சுட்டுவிடுவார்கள். அதனால் அவற்றில் மை ஊற்றினால் உலர்ந்து போகாது. அதேபோல உலோகங்களினாலும் ஆன மைக்கூடுகளும் காந்தாரப் பண்பாட்டில் இருந்தன.
இங்கு இன்னும் ஒரு அதிசியமான மண் பாண்டம் கிடைத்துள்ளது. இன்று நாம் நீராவியை இறக்கும் கண்ணாடிக் குவளைகளை விஞ்ஞான வகுப்புகளில் பார்க்கிறோமல்லவா? அதேபோல அந்த மண்பாண்டம் இருக்கிறது. நீண்ட வளைந்த குழாய்போன்ற வாயை உடையதாக ஒரு பாத்திரம் இருக்கிறது. மற்றொரு பாத்திரம் அக்குழாய்க்குள் நுழைவதாக இருக்கிறது. வளைந்த குழாயை உடைய பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றிக் காய்ச்சினால் அதிலிருந்து உண்டாகும் நீராவி மற்ற பாத்திரத்துக்குச் சென்று குளிர்ந்து நீராக மாறுகிறது. இதிலிருந்து அக்காலத்திலேயே நீராவி இறக்கும் முறை தெரிந்திருந்தது என்று கொள்லாம் அல்லவா? இரண்டு, மூன்று அல்லது நான்கு மூக்குகளையுடைய மண்பாத்திரங்களும், கிரேக்க, ரோமானிய நாடுகளில் உபயோகித்திலிருந்து வந்தன.
மண்ணினாலான மற்றைய பொம்மைகளில் விளக்குகள் நன்றாக இருக்கின்றன. முன்பே ரோமானிய பண்பாட்டில் இருந்த பொம்மைகளைப்பற்றித் தெரிந்து கொணடோம். அப்போது ரோமானியர் அழகான விளக்குகள் செய்வதில் சிறந்தவர்கள் என்று பார்த்தோம். காந்தார நாட்டில் இருந்தவர்கள் கிரேக்க, ரோமானியக் கலைஞர்களை வரவேற்று அவர்களைக் கொண்டு தங்கள் பொம்மைகளைச் செய்தார்கள். அதனால் அவர்களது பொம்மைகள் கிரேக்க நாட்டு பொம்மைகள் போலவும், ரோமானிய நாட்டு பொம்மைகளைப் போலவும் இருக்கின்றன. ஆமை உருவத்தில் அழகான விளக்குக் கிடைத்துள்ளது. ஒரு பொம்மை நின்றுகொண்டிருக்கிறது. அதன் கையில் ஒரு விளக்கு இருக்கிறது. இதுபோன்ற விளக்குகளுக்கு "பாவை விளக்குகள்" என்று நம் நாட்டில் பெயர். இந்த விளக்குகளும் அதிகம் அங்கு கிடைத்துள்ளன.
அத்துடன் குளிக்கும்போது உடலைத் தேய்த்துக்கொள்ள அக்காலத்தில் சோப்புகள் கிடையாது. அதனால் களிமண்ணால் சோப்புக்களைப்போல் கட்டிகள் செய்து அதைக்கொண்டு உடலைத் தேய்த்துக் கொண்டார்கள். அதுபோன்ற பல கட்டிகள் கிடைத்துள்ளன. சின்னச் சின்ன களிமண் பொம்மைகள் குழந்தைகள் விளையாடுவதற்காகச் செய்யப்பட்டன. பல பொம்மைகள் இவ்விடத்தைத் தோண்டிப் பார்த்தபோது கிடைத்துள்ளன. நடன பொம்மை, நிற்கிற பொம்மை, உட்கார்ந்திருக்கிற பொம்மை எல்லாம் கிடைத்திருக்கின்றன.
சக்கரம் கொண்ட மாட்டுப் பொம்மைசக்கரம் கொண்ட குதிரைப் பொம்மை
இந்தப் பொம்மைகளில் சில முக்கியமானவை. குதிரையைப்போல ஒரு பொம்மை. அது பாய்ந்து ஓடுவது போலச் செய்யப்பட்டு இருக்கிறது. முன்கால் இரண்டின் வழியாகத் துளைபோட்டு ஒரு குச்சியைச் செலுத்தியுள்ளனர். அதன் இரண்டு பக்கத்திலும் இரண்டு சின்ன சக்கரம் வைக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல பின் கால்களிலும் இரண்டு சக்கரம். அதாவது நான்கு சக்கரங்கள் இருக்கின்றன. மூக்கில் ஒரு துளைபோட்டிருக்கிறது. அதில் சின்ன நூல் கயிற்றைக்கட்டி இழுப்பதுபோல் செய்திருக்கிறார்கள. நாம் இப்போது பொம்மைத் தேரைக் கயிறுகட்டி இழுக்கிறோமல்லவா? அதேபோல இந்த குதரைப் பொம்மையையும் தரதரவென்று இழுக்கலாம். இதேபோல பல மிருகங்கள் சக்கரம் போட்டுக் கிடைத்துள்ளன. மாடு, யானை, நாய் முதலிய சக்கரம் போட்ட மிருகங்கள் உள்ளன. வாத்து, புறா, காக்கை முதலியவற்றின் பொம்மைகளும் இருக்கின்றன. அனால் அவற்றில் இரண்டு சக்கரங்கள்தான் இருக்கின்றன. இது தவிர, சக்கரம் போடாத ஒட்டகம், மாடு முதலிய பொம்மைகளும் இருந்தன. சின்னச் சின்ன பொம்மை வீடுகளும் கிடைத்துள்ளன.
களிமண்ணால் ஆன பொம்மைகள் போலவே பாசி, மணி போன்ற மணிகளினால் ஆன மிருகங்களும் கிடைத்துள்ளன. இந்த மிருகங்கள் எதற்க்காச் செய்யப்பட்டவை தெரியுமா? இப்போதும் நம் பெண் குழந்தைகள் தங்கள் கழுத்தில் போட்டுக்கொள்ளும் சங்கிலிகளில் டாலர்களைத் தொங்கவிட்டுக் கொள்கிறார்கள் அல்லவா? அதே போல தந்தம், பிளாஸ்டிக் முதலியவற்றால் ஆன சிங்கம், புலி, குதிரை போன்ற மிருகங்களையும் தொங்கவிட்டுக்கொள்கிறார்கள் அல்லவா? அக்காலத்திய குழந்தைகளும் தங்களது கழுத்துச் சங்கிலிகளில் பொம்மைகளைத் தொங்கவிட்டுக் கொண்டனர். இவ்விதம் தொங்கவிட்டுக் கொள்ள சிங்கம், தவளை, யானை, ஆமை, ஆடு, குரங்கு, தேள் முதலியவைகள் செய்யப்பட்டன.
உலோகத்தினால் ஆன பொம்மைகள் கிடைத்துள்ளன. ஒரு சிங்கத்தின் பொம்மை ஒன்று கிடைத்துள்ளது. அது சின்னப் பொம்மையான போதிலும் மிகவும் அழகாக இருக்கிறது. பின்னங்கால்களை ஊன்றி முன்னால் பாய்ந்து "ஆ" என்று வாயைத் திறந்து கொண்டு இருப்பதைப் பார்த்தால் அந்தப் பொம்மை நமக்கு கிடைக்காதா, அதை வைத்துக் கொண்டு விளையாடமாட்டோமா என்று எண்ணத் தோன்றும். ஒரு ஒட்டகத்தின் பொம்மை உட்கார்ந்திருப்பதுபோல் இருக்கிறது. இதபோல் இன்னும் எவ்வளவோ பொம்மைகள். நம் வீட்டில் கொலுவில் வைப்போமே மரப்பாச்சி பொம்மை; பின்னால் பின்னலை தொங்கவிட்டுக் கொண்டு இரண்டு கைகளையும் உடம்போடு ஒட்டினால்போல் வைத்துக் கொண்டு அட்டென்ஷனில் நிற்பது போல் உள்ள ஒரு பொம்மை. அதேபோல கல்லினால் ஆன பொம்மையும் இருக்கிறது. எகிப்து நாட்டிலும், கிரேக்க நாட்டிலும் இருந்த குழந்தைகள் போன்ற பொம்மைகளும் கிடைத்திருக்கின்றன. கிலுகிலுப்பைகளும், ஊதல்களும் கிடைத்துள்ளன.
காந்தார நாட்டில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்கள் கிரேக்கர்களும் அவர்களுக்குப் பின்னால் வந்த சகர்களும் என்று சொன்னேன் அல்லவா? அதனால்தான் காந்தாரப் பண்பாட்டில் கிடைத்துள்ள பொம்மைகள் கிரேக்க, ரோமானியர்களால் செய்யப்பட்டவை. அந்த நாட்டில் இருந்த பொம்மைகளைப் போலவே இங்கும் கிடைத்துள்ளன.
இதுபோன்று பல நாட்டின் பண்பாடுகளையும் அவர்களது பொம்மைகள் மூலமாகவே நாம் தெரிந்து கொள்லாம்.